பிஎஸ்சி பக்காத்தான் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் காலக் கெடுவை வலியுறுத்தினர் என்கிறார் லோக்

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மாற்றங்கள் அமலாக்கப்பட வேண்டும் என அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பக்காத்தான் எம்பி-க்கள் வலியுறுத்தவில்லை எனக் கூறப்படுவதை ராசா எம்பி அந்தோனி லோக் இன்று மறுத்துள்ளார்.

பிஎஸ்சி-யின் முக்கியமான பரிந்துரைகள் குறிப்பாக பெர்சே 2.0ன் கோரிக்கைகள் தேர்தல் நிகழ்வதற்கு முன்னர் அமலாக்கப்பட வேண்டும் எனப் பல முறை அந்தக் குழு கூட்டங்களில் தெளிவுபடுத்தியதாக லோக் தெரிவித்தார்.

“நீங்கள் கூட்டக் குறிப்புக்களை சோதனை செய்யலாம். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும் என நாங்கள் ஒவ்வொரு பிஎஸ்சி கூட்டத்திலும் கூறிருப்பது தெரிய வரும்.”

“ஆனால் நாங்கள் பிஎஸ்சி-யில் சிறுபான்மையினர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நாங்கள் மற்றவர்களை ஆட்சேபிக்க முடியாது,” என்றார் அவர்.

எழுவர் கொண்ட பிஎஸ்சி-யில் லோக்-குடன் கோம்பாக் எம்பி அஸ்மின் அலி, கோலக்கிராய் எம்பி ஹாட்டா ராம்லி ஆகிய மூவர் பக்காத்தான் எம்பி-க்கள் ஆவர்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக முக்கிய பிஎஸ்சி பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும் என்பதை அந்தக் குழுவில் இருந்த பக்காத்தான் எம்பி-க்கள் குறிப்பாக அதன் சிறுபான்மை அறிக்கையில் வலியுறுத்தத் தவறி விட்டதாக பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் புகார் செய்துள்ளதற்கு லோக் பதில் அளித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடப்புக் கொண்டு வர வேண்டிய தனது ஐந்து யோசனைகளை சிறுபான்மை அறிக்கை குறிப்பிடவில்லை என்பதை ஒப்புக் கொண்ட அவர், 13வது தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக குறுகிய காலக் கெடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

நீங்கள் அந்த அறிக்கையைப் பார்த்தால், நாங்கள் 15 முதல் 30 நாட்கள் வரை காலக் கெடு விதித்துள்ளோம். கூடின பட்சம் கொடுக்கப்பட்டுள்ளது 45 நாட்களாகும். ஆகவே ஜுன் மாதம் தேர்தல் நிகழ்ந்தால் கூட அவற்றை அமலாக்கி விடலாம்,” என்றார் லோக்.

அரசியல் நிதிகள் சம்பந்தப்பட்ட சீர்திருத்தங்களை அமலாக்க நீண்ட காலம் தேவை என்றும் அவர் சொன்னார்.

TAGS: