மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்பு போராட்டத்தின் போது மாணவர்களுடைய கூடாரத்தை பறிமுதல் செய்ய கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தைச் (DBKL) சேர்ந்த 30 அதிகாரிகள் இன்று காலை முயன்ற போது மூண்ட கைகலப்பில் பல மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவர்கள் மூன்றாவது நாளாக மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை மணி 10.15 வாக்கில் அங்கு இருந்த கூடாரம் ஒன்றை அகற்றுவதற்கு முயன்ற வேளையில் DBKL-ஐ சேர்ந்த 30 அதிகாரிகள் 12 மாணவர்களுடைய எதிர்ப்பை எதிர்நோக்கினர்.
அதனைத் தொடர்ந்த கைகலப்பில் நான்கு மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“ஒரு மாணவருக்கு சிராய்ப்பு ஏற்பட்டது. என்னைப் போன்று மூவர் குத்தப்பட்டோம்,” அந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள அமைப்புக்களில் ஒன்றான Malaysia Bangkitன் தலைவர் ஷாஹிட் முகமட் ஜைனி கூறினார்.
தமது இடப்பக்க நெஞ்சுப் பகுதி தாக்கப்பட்டதாகவும் அலிப் அஷ்ராப் இழுக்கப்பட்டு உதைக்கப்பட்டதால் அவருக்கு சிராய்ப்புக்கள் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.
PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதியின் கடனுக்கு ஆட்சேபம் தெரிவித்து கடந்த சனிக் கிழமை ஊர்வலமாகச் சென்ற 30 மாணவர்கள் மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துக் கொண்டனர்.
அதிகாரிகள் தங்களது குறைகளுக்கு பதில் அளிக்கும் வரையில் குந்தியிருப்புப் போராட்டத்தைத் தொடரப் போவதாக அந்த மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.
அதிகாரிகள் அவ்வாறு செய்யத் தவறினால் ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழும் வரை அங்கு இருக்க அந்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.