பிரதமர் தங்களது வாழ்நாள் துயரத்தை போக்க வேண்டும் என ‘நாடற்ற இந்தியர்கள்’ கோரிக்கை

வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு நூற்றுக்கணக்கான நாடற்ற மலேசிய இந்தியர்கள் ஒன்று கூடவிருக்கின்றனர்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தங்களது மனக்குறைகளை செவிமடுத்து நெடுங்காலமாகத் தொடரும் தங்களது அவலத்தைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு கூடுகின்றனர்.

அவர்கள் மலேசியாவில் பிறந்து வளர்ந்த போதிலும் அவர்களில் பலருக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி மட்டுமே உள்ளது. அவர்களுடைய குடியுரிமை விவகாரத்தைச் சுற்றியுள்ள பிரச்னைகளை அரசாங்கம் இன்னும் தீர்க்கவில்லை.

அதன் விளைவாக அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களும் வேலை வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டுள்ளன. சொக்சோ என்ற சமூகப் பாதுகாப்பு நிறுவனம், இபிஎப் என்ற ஊழியர் சேம நிதி வாரியம் ஆகியவை வழங்கும் பாதுகாப்பு வலயங்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நடத்திய MyDaftar இயக்கம் “அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மலேசிய இந்தியர்களுடைய வாக்குகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பயனற்ற மோசமான பொது உறவு நடவடிக்கை” என அவர் வருணித்தார்.

தங்களது துயரங்களை இனிமேலும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் அமைதியான பேரணி மூலம் தங்களது குறைகள் செவிமடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என அவர்கள் நம்புகின்றனர் என்றும் சுரேந்திரன் சொன்னார்.

அந்தப் பேரணியில் 100 முதல் 200 பேர் வரையிலான நாடற்ற இந்தியர்களும் பிகேஆர் ஆதரவாளர்களும் கலந்து கொள்வர் என தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் கூறினார்.

பிரதமர் அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு விரைவாக செயல்படுவதோடு  அந்த சமூகத்திடம் நஜிப்-பும் பிஎன்னும் ‘மன்னிப்பு’ கேட்டு அவர்களுடைய குடியுரிமைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வேண்டும் என்றும் சுரேந்திரன் வலியுறுத்தினார்.

40,000 நாடற்ற மலேசிய இந்தியர்கள் மட்டுமே இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது தவறானது. உண்மையான எண்ணிக்கை 300,000-மாக இருக்கும் என அவர் கூறிக் கொண்டார்.

பல்வேறு சமூகப் போராளிகளும் சமூக அறிவியலாளர்களும் வழங்கிய தகவல்கள் அடிப்படையில் தமது மதிப்பீடு அமைந்துள்ளதாக அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இந்திய சமூகத்தை அரசாங்கம் நீண்ட காலமாகப் புறக்கணித்து வந்துள்ளது என்பதற்கு அது தக்க சான்று ஆகும். ‘என்னுடன் நடந்து வாருங்கள்’ என நஜிப் அடிக்கடி சொல்லும் சொற்றொடர் உண்மையற்றது சந்தர்ப்பவாதமானது என்றார் அவர்.

நஜிப் அண்மைய காலமாக மலேசிய இந்தியர்களுடைய ஆதரவை பெறுவதற்காக நம்பிக்கை  என்னும் சொல்லையும் பயன்படுத்தி வருகிறார்.