மாநகராட்சி அதிகாரிகளால் கிழித்தெறியப்பட்ட கூடாரங்களுக்கு மாற்றாக புதிய கூடாரங்களை டத்தாரான் மெர்தேக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு அவரகளது நலன் விரும்பிகள் இன்று வழங்கினர்.
இன்று அவர்களது போராட்டத்தின் மூன்றாம் நாளாகும்.
நாள் ஒன்றுக்கு பல தடவைகளில் மாணவர்களுக்கு உணவு, நீர் மற்றும் ரொக்கம் வழங்கப்படுகிறது என்று சோலீடேரிட்டி மகாசிஸ்வா மலேசியாவின் செயலாளர் ஹஸிக் அப்துல் அசிஸ் இன்று கூறினார்.
இன்று காலையில் நடந்த சம்பவத்தில் மாணவர்களின் ஒரு கூடாரம் கிழிக்கப்பட்டது. பந்தாய் செரெஜாக் சட்டமன்ற உறுப்பினர் ஸெ சின் அவர்களுக்கு மூன்று கூடாரங்களையும் இதர பொருள்களையும் வழங்கினார்.
“கிழிக்கப்படும் ஒவ்வொரு கூடாரத்திற்கும் நாங்கள் மூன்று கூடாரங்கள் வழங்குவோம்”, என்றாரவர்.
புக்கிட் பிந்தாங் மற்றும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் ஆகியோரும் மாணவர்களுக்கு எட்டு கூடாரங்களோடு இதர பொருள்களையும் கொடுத்தனர்.
இலவச கல்வி மற்றும் பிடிபிடிஎன் அகற்றப்பட்ட வேண்டும் என்று கோரி கடந்த சனிக்கிழமையிலிருந்து அவர்கள் குந்தியிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெர்சே பேரணி 3.0 பேரணி நடக்கவிருக்கும் ஏப்ரல் 28 ஆம் தேதி வரையில் அல்லது தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும் வரையில் போராட்டத்தை தொடரப் போவதாக அவர்கள் சூளுரைத்தனர்.
அம்னோ சின்னம் பொரிக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து வந்த சிலர் தங்களை அதன் சமுதாய விவகார அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டதாக ஹஸிக் கூறினார்.
அவர்கள் நாசிலெமாக் பொட்டலங்களைக் கொண்டு வந்திருந்தனர். அதனை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
முன்னதாக, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா வந்து மாணவர்களைக் கண்டார். அமைதியாகக் கூடுவதற்கான மாணவர்களின் உரிமையை மதிக்குமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.