நஜிப்: சிலாங்கூர் பிஎன் கட்டுக்குள் திரும்பும் தறுவாயில் உள்ளது

சிலாங்கூர் பிஎன் கட்டுக்குள் திரும்பும் தறுவாயில் உள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

இந்திய சமூகம் உட்பட மக்களிடமிருந்து கிடைக்கும் அறிகுறிகள் பிஎன்-னுக்கு தெளிவாக சாதகமாக இருக்கின்றன என்றார் அவர்.

நஜிப் நேற்று சிலாங்கூரில் உள்ள சிலாயாங், கோலா சிலாங்கூர், தஞ்சோங் காராங், காப்பார் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளைச் சார்ந்த 13,000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட – கோலா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள தென்னமரம் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

தமது படம் பொறிக்கப்பட்டிருந்த ஒரே மலேசியா சட்டைகளைப் பெருந்திரளான மக்கள் அணிந்திருந்ததையும் நஜிப் அங்கீகரித்தார்.

“பிஎன்-னுக்கு ஆதரவு அல்லது வாக்குகள் அதிகரிப்பதை அது பிரதிபலிப்பதாக நான் எண்ணுகிறேன்,” என்றார் அவர்.

‘இந்தியர்களைத் தான் கவனிப்பதை பிஎன் எடுத்துக்காட்டியுள்ளது’  

இந்திய சமூகம் உட்பட மக்களுடைய நலன்களை தான் கவனிப்பதை பிஎன் எடுத்துக்காட்டியுள்ளது என்றும் பிரதமர் சொன்னார்.

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பயிற்சிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1,500 இடங்களுடன் கூடுதலாக 1,000 இடங்கள் வழங்கப்படுவதில் அது பிரதிபலிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Tekun, Amanah Ikhtiar Malaysia போன்ற திட்டங்கள் வழியாக இந்திய வணிகர்களுக்குக் கடன்கள் கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“பிஎன் வாக்குறுதி அளித்ததை நாங்கள் வழங்கியுள்ளோம். தமிழ்ப் பள்ளிகளுக்குக் கூடுதல் ஒதுக்கீடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.”

இந்திய சமூகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நம்பிக்கை தேவை என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னர் தென்னமரம் தோட்டத்துக்கு சைம் டார்பி தோட்ட நிர்வாகம் நிர்மாணித்துள்ள வீடமைப்பு, நிர்வாக வளாகத்தைத் திறந்து வைத்தார்.

பெர்னாமா