ஒரே மலேசியா மக்களை அவமானப்படுத்துவதற்கும் ஏழை இந்தியர்களின் உயிரைப் பறிப்பதற்குமா என்று வினவுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
திங்கட்கிழமை (ஏப்ரல் 16) கோலசிலாங்கூரில் நடைபெற்ற “ஒரே மலேசியா உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்வில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று அவர் இன்று விடுத்த ஒரு செய்தி அறிக்கையில் கூறுகிறார்.
“மரியாதையுடன் வழங்க வேண்டும்”
“மக்களை அவமானப்படுத்தும் இந்த போலியான ஒரே மலேசியா நாடகம் நம்பிக்கை என்னும் சொல்லுக்கு சற்றும் தொடர்பற்றது என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் நிரூபித்து விட்டது”, என்று அவர் மேலும் கூறுகிறார்.
“இந்தியர்கள் ஏழைகள்தான். அவர்களுக்கு ஏதேனும் வழங்குவதாக இருந்தால், அதனை பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் மரியாதையுடன் வழங்க வேண்டும்”, என்பதை சேவியர் வலியுறுத்தினார்.
இந்தியர்களின் ஏழ்மை ஒரே நாளில், ஒரு கூடை அரிசியின் வழி தீர்ந்து விடக்கூடியதல்ல; அல்லது பிரதமரின் “நம்பிக்கை” என்னும் வாய்ஜாலத்தால் தீர்ந்துவிடக்கூடியதுமல்ல என்றும் அவர் கூறினார்.
ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கத்திடம் பல வழிமுறைகளும் துறைகளும் இருக்கின்றன. அதன் மூலம் நிரந்தரமான ஏழ்மையை நீக்கி, அவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்திருந்தால் பிரதமர் நஜிப் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார்.
“ஆனால், ஒரு கூடை அரிசிக்கு மணிக்கணக்கில் மக்களைக் காக்கவைப்பதும் மைல்கணக்கில் முதியோர்களை நடக்கவைப்பதும் நேற்று நடந்ததுபோல் கூட்ட நெரிசலில் உயிர் இழப்பு ஏற்படுவதும் மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது”, என்று சேவியர் சாடினார்.
“மக்களை அரசியல் பகடையாக பயன்படுத்தி வருவது மன்னிக்க முடியாத குற்றமாகும்”, என்றாரவர்.
“இந்தியர்களை இந்த அளவுக்கு அவமானப்படுத்தப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்துவரும் பாரிசான் பங்காளிக் கட்சிகளிலுள்ள இந்தியர்கள் பாரிசானுக்கும் பிரதமருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்கத் தவறியதால் உயிர் இழப்பிற்குக் காரணமாகி விட்டனர்.
“இவர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்திய சமூகத்தை பாரிசானிடம் அடகு வைக்கப்போகிறார்கள்?”, என்று சேவியர் தமது வேதனையையை வெளிப்படுத்தினார்.
அப்படி எதுவும் நடக்கவில்லை
தென்னமரம் தோட்டத்தில் நடந்த இந்நிகழ்வில் ஏற்பட்ட இச்சோகச் சம்பவங்கள் குறித்து அத்தோட்டதில் அமைந்துள்ள தாமான் தென்னமரம் தலைவர் எஸ். இராஜசேகரனிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.
தாம் இது குறித்து பெஸ்தாரி ஜெயா கெதுவா பாலாய் போலீசிடம் விசாரித்ததாகவும் அவரும் அவ்வாறான புகார்கள் எதுவும் பெறப்படவில்லை என்று கூறியதாகவும் இராஜசேகரன் தெரிவித்தார்.
ஆனால், சில “காணாமல் போன” குழந்தைகள் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் அக்குழந்தைகளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர் இராஜசேகரன் மேலும் கூறினார்.