ரயில் நிலையங்களில் ஆளும் கூட்டணியின் ‘dacing’ (தராசு) கொடிகளைப் பறக்க விடுமாறு தான் உத்தரவிட்டதாகக் கூறப்படுவதை கேடிஎம் என்ற மலாயன் ரயில்வே மறுத்துள்ள போதிலும் சில ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறப்பதைக் காண முடிகிறது.
கோலாலம்பூரிலிருந்து போர்ட் கிளாங் வரையிலான கேடிஎம் Komuter ரயில் நிலையங்களை
மலேசியாகினி நிருபர்கள் வலம் வந்த போது ஷா அலாமுக்கு அருகில் உள்ள இரண்டு நிலையங்களில் பிஎன் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதைக் கண்டனர்.
பத்து தீகா நிலையத்தின் வேலி நெடுகிலும் 30 கொடிகள் தென்பட்டன. ரயில் நிலைய வளாகத்துக்கு
அருகில் அரசாங்கக் குடியிருப்புக்கள் என கருதப்படும் பல வீடுகளிலும் கொடிகள் பறந்தன. ஷா
அலாம் நிலையத்தில் 10 கொடிகள் காணப்பட்டன.
என்றாலும் பெட்டாலிங், டெம்ப்ளர், ஸ்ரீ செத்தியா, செத்தியாஜெயா, சுபாங் ஜெயா ஆகிய
நிலையங்களில் பிஎன் கொடிகள் ஏதும் காணப்படவில்லை.
இப்போது பக்காத்தான் ராக்யாட் கட்டுக்குள் இருக்கும் சிலாங்கூரில் எல்லா 28 ரயில் நிலையங்களிலும் பிஎன் கொடிகள் பறக்க விடப்பட வேண்டும் என சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளரும் கேடிஎம் பெர்ஹாட் தலைவருமான முகமட் ஜின் முகமட் ஆணையிட்டுள்ளதாக கடந்த சனிக் கிழமை மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
பிஎன் கொடிகள் முக்கியமான இடங்களிலும் ரயில்களுக்கும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத இடங்களிலும் பறக்க விடப்படுவதை உறுதி செய்யுமாறும் கேடிஎம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
அந்தக் கொடிகள் சேதப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு அவற்றைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு சிப்பாங் எம்பி-யுமான முகமட் ஜின் துணைப் போலீசாருக்கு ஆணையிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்த உத்தரவை பிறப்பித்ததாக சொல்லப்படுவதை அவர் மறுத்தார்.
என்றாலும் ரயில்கள் சுமூகமாக ஒடுவதற்கு தடையாக இல்லாத வரையில் பிஎன் கொடிகளைப் பறக்க விடுவதற்கு அனுமதி அளித்ததை அந்த முன்னாள் பொதுப் பணி அமைச்சர் ஒப்புக் கொண்டார்.
இதனிடையே கேடிஎம் நிலையங்களில் பிஎன் கொடிகளை பறக்க விடுவது தொடர்பான உத்தரவை விளக்குமாறு கேடிஎம் நிர்வாகத்தை KTMB தொழிற்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த விவகாரம் மீது முகமட் ஜின்-னைச் சந்திக்க தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அதன் தலைவர் அப்துல் ரசாக் அப்துல் ஹமிட் கூறினார்.
“எனக்கு அந்த உத்தரவு கிடைக்கவில்லை. ஊடகத் தகவல்கள் வழியாகவே நான் அதனை அறிந்தேன்,” எனக் கூறிய அவர் அத்தகைய உத்தரவு வெளியிடப்பட்டிருந்தால் அது முறையல்ல என்றார்.
ரயில் நிலையங்களுக்கு வெளியில் அந்தக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தால் பிரச்னை ஏதுமில்லை. ஆனால் அவை ரயில் நிலையைப் பகுதிக்குள் காணப்பட்டால் அது முறையானது அல்ல,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.