தேர்தல் ஆணைய (இசி) விளக்கக் கூட்டம் தேர்தல் ஆரூடங்களைப் பலப்படுத்தியுள்ளது

ஜோகூர் பாரு மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படவிருக்கும் பள்ளிக்கூடங்களை சார்ந்த ஆசிரியர்கள் இன்று இசி என்ற தேர்தல் ஆணையம் நடத்தும் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் நெருங்கி வருகிறது என்னும் ஊகங்கள் அதிகரித்துள்ளன.

வாக்களிப்பு மய்யங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு அந்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நேற்று அவசரம் அவசரமாக கடிதங்கள் அனுப்பப்பட்டன.

ஜாலான் தெப்ராவ்-வில் உள்ள உள் அரங்கம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்தக் கடிதத்தில் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவகற்ப மலேசியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் அது போன்ற விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றனவா என்பது தெரியவில்லை. என்றாலும் ஜோகூரில் நிகழ்ந்தால் மற்ற மாநிலங்களிலும் நடத்தப்படுவது திண்ணம் என ஒரு வட்டாரம் கூறியது.

புதிய ஊடகச் சட்டங்கள்

மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி பெர்சே குந்தியிருப்பு போராட்டத்தை நடத்துவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விரும்பக் கூடும்.

பெர்சே தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனப் போராடுகிறது.

12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது  கூட்டத் தொடர் மார்ச் 12ம் தேதி தொடங்கியது. அது நாளை மறு நாள் நிறைவுக்கு வருகிறது.

நாடாளுமன்றம் பெரும்பாலும் அடுத்த மாதம் இன்னொரு கூட்டத்தை நடத்திய பின்னரே கலைக்கப்படும் என சில தரப்புக்கள் கருதுகின்றன. மேலும் தாராளமானது எனக் கூறப்பட்டுள்ள ஊடகச் சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு அது வழி வகுக்கும்.

கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் அறிவித்த தாராள மய நடவடிக்கைகளை புதிய ஊடகச் சட்டங்கள் முழுமையாக்கும் எனக் கருதப்படுகிறது.

அமைதியாக ஒன்று கூடும் சட்டம், தேர்தல் நடைமுறைகளுக்கான சீர்திருத்தங்கள் ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டன. உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கிற்கான மருட்டல்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்படது.

மலேசிய அரசியலை உருமாற்றம் செய்யவும் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் தாம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அவை தக்க சான்றுகள் எனவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.