மெர்தேக்கா சதுக்கத்தில் வரும் சனிக் கிழமை நடைபெறவிருக்கும் அரச இசை நிகழ்ச்சிக்கு இடையூறு செய்வதில்லை என அந்தச் சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
“நாங்கள் கூட்டம் நடத்தினோம். அகோங்-கை அவமதிப்பதாக கருதப்படக் கூடிய எந்த பிரச்னையையும் தவிர்ப்பது என நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் அரச இசை நிகழ்ச்சிக்காக எங்களை விலக்கிக் கொள்வோம்.”
“நாங்கள் ஒரளவு பின் வாங்கி மக்கள் எங்களைப் பார்க்க முடியாத இடத்திற்கு செல்வோம். ஆனால் பின்னர் நாங்கள் இங்கு முகாம்களை அமைப்போம்,” Solidariti Mahasiswa Malaysia அமைப்பின் செயலாளர் ஹாசிக் அப்துல் அஜிஸ் நேற்றிரவு கூறினார்.
மாமன்னரைக் கௌரவிக்கும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியை ஒட்டி மாணவர்கள் முகாம்களை அகற்ற வேண்டும் என உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா விடுத்த வேண்டுகோள் குறித்துக் கருத்துரைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.
இரவு பின்னேரத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படக் கூடிய சாத்தியம் பற்றியும் அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ஹாசிக், எத்தகைய ஊடுருவலையும் கண்காணிக்க பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“நாங்கள் ஏற்கனவே செய்ததைப் போல முடிந்த வரை அதனை எதிர்ப்போம். நாங்கள் எதிர்க்க மட்டுமே முடியும். நாங்கள் திரும்பச் சண்டை போட முடியாது,” என்றார் அவர்.
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின் ஆகியோரது ‘நல்லடக்க’ படங்கள் கொண்டு செல்லப்பட்டதற்காக ஹாசிக் உட்பட மாணவர்களை சைபுடின் கண்டித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அது முக்கியப் பிரச்னையிலிருந்து திசை திருப்புவதாகும் என நிராகரித்தார்.
“கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த போது அவர்கள் நாங்கள் எழுப்பிய பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை. மாறாக அடாம் அட்லியை தாக்கிப் பேசினர்.”
அம்னோ தலைமையகத்துக்கு வெளியில் நிகழ்ந்த அந்த ஆர்ப்பாட்டத்தின் போது நஜிப் படம் போடப்பட்டிருந்த கொடியை இறக்கியதற்காக மாணவர் தலைவரான அடாம் கடுமையாக குறை கூறப்பட்டார்.
பல பிரமுகர்கள் மாணவர்களைச் சந்தித்தனர்
நேற்றிரவு பலர் அந்த மாணவர்களைச் சந்தித்தனர். சிலர் உணவுப் பொருட்களையும் மற்ற இன்றியாமையாப் பொருட்களையும் வழங்கினர். பேராக் முன்னாள் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதின், பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
பெர்சே அமைப்பின் இன்னொரு கூட்டுத் தலைவரான ஏ சமாட் சைட் மாணவர்களுக்கு 30 நிமிடங்களுக்கு கவிதை வகுப்பு நடத்தினார்.
சட்டப் பேராசிரியரான அஸ்மி ஷாரோம், “153வது பிரிவும் சமநிலையும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதனை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செவிமடுத்தனர்.