தேர்தல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழு பெர்சே 2.0 விடுத்த எட்டுக் கோரிக்கைகளுக்கு அப்பாலும் சென்று பல அம்சங்களைப் பரிசீலிக்கும்.
இவ்வாறு சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
தேர்தல் ஆணையத்தை “வலுப்படுத்துவதற்கான” எல்லா யோசனைகளையும் அந்தக் குழு ஆராயும். எனவே பெர்சே விடுத்த எட்டுக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் அரசாங்க எண்ணத்துக்கு அப்பாலும் அது செல்லும் என்பது அதன் பொருள் என அவர் சொன்னார்.
தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக வழங்கிய யோசனைகளை நஸ்ரி இன்று அமைச்சரவையில் சமர்பித்தார். ஆனால் தேர்தல் ஆணைய யோசனைகளை அவர் வெளியிடவில்லை.
“நீங்கள் அதன் வடிவமைப்பைப் பார்த்தால் அது மிக விரிவானதாகும். சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்தை வலுப்படுத்துவதும் அதன் நோக்கமாகும். நாம் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் ஆராய்ந்தால் நாம் அத்துடன் நின்று விடுவோம்.”
அந்த வடிவமைப்புக்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது, அது அக்டோபர் 3ம் தேதி மக்களவை மீண்டும் கூடும் போது அதற்கான தீர்மானத்தை நஸ்ரி முன்மொழிவார்.
2007ம் ஆண்டு தொடக்கம் பெர்சே அமைப்பு, தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு எட்டுக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.
அதற்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 9ம் தேதி அது அமைதிப் பேரணியை நடத்தியது. ஆனால் போலீசார் வன்முறையைக் கையாண்டு அதனை ஒடுக்கினர்.
அந்தப் பேரணியை அரசாங்கம் எதிர்கொண்ட விதம் குறித்து பரவலாக கண்டிக்கப்பட்டதால் நஜிப் நிர்வாகம் தேர்தல் சீர்திருத்தம் மீது நாடாளுமன்ற சிறப்புக் குழு அமைக்கப்படும் என அறிவித்தது.
ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா தலைமை தாங்குவார். உறுப்பினர்களில் ஐவர் பிஎன்-னையும் மூவர் எதிர்க்கட்சிகளையும் சேர்ந்தவர்களாக இருப்பார். ஒன்பதாவது உறுப்பினர் சுயேச்சையாவார்.
தேர்தல் சீர்திருத்தம் மீதான யோசனைகளை பரிசீலிப்பதற்கு அந்தக் குழுவுக்கு ஆறு மாத அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் அவகாசம் நீட்டிக்கப்படும்.
அரசியலமைப்புத் திருத்தங்கள் தேவைப்படாத சீர்திருத்தங்கள் குழு, தனது பணியை நிறைவு செய்வதற்கு முன்னரே அமலாக்கப்படவும் அமைச்சரவை ஒப்புக் கொண்டது. ஆனால் திடீர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் குழுவின் பணிகள் நின்று விடும்.
“2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இருக்கிறது என்ற எண்ணத்தில் நாங்கள் வேலை செய்கிறோம். அதற்கு பின்னர் தேர்தலை நடத்த 60 நாள் அவகாசம் உள்ளது.”
“நான் ஊகத்தின் அடிப்படையில் வேலை செய்ய முடியாது.”
நாடாளுமன்ற சிறப்புக் குழுவுக்கு தங்களது பேராளர்களை பெயர் குறிப்பிடுவதற்கு முன்னர் சில சிறப்பு வாக்குறுதிகளை எதிர்க்கட்சிகள் கோருவது பற்றிக் கருத்துரைத்த நஸ்ரி,” நாங்கள் அரசு சாரா அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு அப்பால், அதனை அவற்றின் விருப்பமாக கருதுகிறோம். இப்போது அதில் பங்கு கொள்ள விரும்பவில்லை என்றால் வினோதமாக இருக்கிறது,” என்றார் அவர்.
“அவை பங்கு கொண்டாலும் பங்கு கொள்ளா விட்டாலும் நாடாளுமன்ற சிறப்புக் குழு அமைக்கப்படும். ஏனெனில் நாங்கள் சுதந்திரமான நியாயமான தேர்தல்களை விரும்புகிறோம். ஆனால் இப்போது அவை அதனை விரும்பவில்லை எனத் தோன்றுகிறது..”