மாணவர்களை குண்டர்கள் தாக்குவதைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுவதை போலீஸ் மறுக்கிறது

மெர்தேக்கா சதுக்கத்தில் இன்று அதிகாலையில் மாணவ எதிர்ப்பாளர்களைக் குண்டர்கள் தாக்கிய போது போலீஸ்காரர்கள் நேரத்தை கடத்தியதாக கூறப்படுவதை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே மறுத்துள்ளார்.

அதிகாலை மணி 2.40 வாக்கில் கலவரம் மூண்ட போது சாதாரண உடையில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு இருந்ததாக அவர் சொன்னார்.

அதற்கு அடுத்த ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் ஆறு போலீஸ் வாகனங்களும் சீருடை அணிந்த 10  போலீஸ்காரர்கள் அந்த இடத்தைச் சென்றடைந்தனர்.

“போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அந்த ஐந்து அல்லது ஆறு நிமிடம் என்பது அதிகமான நேரமா?” என அவர் வினவினார்.

அந்தச் சம்பவம் நிகழ்ந்த போது போலீசார் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுவதையும் முகமட் சாலே மறுத்தார்.

“நாங்கள் மட்டும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். எங்கள் உளவு அதிகாரி ஒருவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அந்தச் சம்பவத்தில் வணிகர் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்ததாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக சொந்தத் தொழில் செய்யும் 28 வயது நபர் ஒருவர் ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் சாலே கூறினார்.

மாணவர்களைப் பலர் தாக்கியதை வீடியோ படங்கள் காட்டும் வேளையில் ஏன் ஒருவர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டார் என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்,” அது அதிகாலை நேரம். ஏற்கனவே அங்கு இருந்தவர்களையும் தாக்குதல்காரர்களையும் எங்களால் வேறுபடுத்த முடியவில்லை,” என்றார்.

தாக்குதலை நடத்தியவர்கள் அரசியல் ரீதியில் தொடர்புடையவர்களா என்பதை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் முகமட் சாலே சொன்னார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரிடமிருந்து கூடுதல் தகவல் கிடைக்கும் என அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

மெர்தேக்கா சதுக்கத்தில் போலீஸ்காரர்களை நிறுத்தி வைப்பது போலீஸ் பரிசீலிக்கும் என்றும் கூறிய அவர், அவர்கள் சீருடை அணிந்தவர்களா என்பதை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

மெர்தேக்கா சதுக்கம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றக் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் மாணவ எதிர்ப்பாளர்களை வெளியேற்றுவதற்கு போலீசாருக்கு அதிகாரம் இல்லை என்றும் முகமட் சாலே தெரிவித்தார்.