நாடாளுமன்றக் கட்டிடத்தின் நுழைவாயிலில் இன்று 200 மலேசிய இந்தியர்கள் ஒன்று கூடி நாடற்ற தங்களது நிலை தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரினர். தங்களைப் போன்று நாடற்ற நிலையில் இருக்கும் மற்ற 300,000 பேரும் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அவர்கள் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் மகஜர் கொடுக்க எண்ணியிருந்தனர். ஆனால் அதனைப் பெற்றுக் கொள்ள அரசாங்கப் பேராளர் யாரும் வராததால் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அதனைப் பெற்றுக் கொண்டார்.
அங்கிருந்த நாடற்ற இந்தியர்களுடன் கைகுலுக்கிய அன்வார் அந்த விவகாரத்தை அரசாங்கத்திடம் எழுப்புவதாகவும் உறுதி அளித்தார். அவர் பிகேஆர் மூத்த தலைவரும் பெர்மாத்தாங் பாவ் எம்பி-யும் ஆவார்.
கூட்டத்தினர் ‘Najib zalimi masyarakat’ ( நஜிப் சமூகத்துக்கு தவறு செய்து விட்டார்) என்ற வாசகத்தைக் கொண்ட பதாதையும் வைத்திருந்தனர்.
அவர்கள் நஜிப் படத்தைக் கொண்ட நிரந்தர வசிப்பிடத் தகுதியுடைய ஒருவருக்கான போலி அடையாளக் கார்டையும் அவர்கள் பிடித்திருந்தனர்.
நஜிப் நஜிப் ! Turun padang! (களத்தில் இறங்கவும்) என்றும் அவர்கள் முழங்கினர்.
அவர்களில் பலர் தங்களது சிவப்பு நிற (நிரந்தர வசிப்பிடத் தகுதி) அடையாளக் கார்டையும் காட்டினர்