எதிர்க்கட்சி ஆதரவு அமைப்புக்களுடன் தொடர்புடையது எனக் கூறப்பட்ட வாக்களிப்பு விழிப்புணர்வு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெர்லிஸ் மலேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு 66 நாட்களுக்குக் கல்வியிலிருந்து நீக்கமும் 100 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு, கெடா, பெர்லிஸ் ஆகியவற்றைச் சேர்ந்த 14 மாணவர் அமைப்புக்களுடன் கங்காரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் ஜனவரி மாதம் 13ம் தேதி ஏற்பாடு செய்ததாக தமக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது என 25 வயதான முகமட் ஜைனி இசுவான் என்ற அந்த மாணவர் சொன்னார்.
அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேஎண்டியதின் முக்கியத்துவம் மீது பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ‘Watch 13′ என்னும் தலைப்பைக் கொண்ட அந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
முகமட் இசுவானுடைய நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்துக்கு பாதகமான தோற்றத்தை அளித்துள்ளதாக அந்தப் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டி அந்த இறுதி ஆண்டு மாணவருக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தது..
தொடர்பு கொள்ளப்பட்ட போது இசுவான், தாம் அந்த இயக்கத்தின் ஏற்பட்டாளர் என்பதை மறுத்தார். அந்த நிகழ்வில் பார்வையாளராக மட்டுமே கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
“நான் பார்வையாளராகச் சென்றேன். ஏற்பாட்டாளராக அல்ல. அந்த நிகழ்வில் பார்வையாளராகக் கலந்து கொள்வதில் என்ன தவறு ? ” என இசுவான் வினவினார்.
பல்கலைக்கழக விசாரணையின் போது தமது சாட்சிகளைக் கொண்டு வருவதற்கும் பல்கலைக்கழகத் தரப்புச் சாட்சிகளை கேள்வி கேட்பதற்கு தமக்குத் தடை விதிக்கப்பட்டதையும் அவர் சாடினார்.
உண்மையில் அந்த நிகழ்வு ‘Watch 13′ இயக்கம் மீதான நிருபர்கள் சந்திப்பு என ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.
மாணவர் அமைப்புக்களின் கூட்டணி அமைக்கப்பட்டது மீது தங்களது அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக அங்கு சென்ற அடையாளம் தெரியாத தரப்புக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் மூண்டதாக சொல்லப்பட்டது.
‘Watch 13′ எதிர்க்கட்சிகளின் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாக அந்த அடையாளம் தெரியாத அமைப்பு கூறிக் கொண்டது.
அந்த நிகழ்வின் போது’ஊழல்’, ‘உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்’, ‘ஆவி வாக்காளர்கள், ‘பரம ஏழைகள்” எனக் கூறும் வாசகங்களைக் கொண்ட பலூன்களையும் மாணவர்கள் பறக்க விட்டதாகவும் சொல்லப்பட்டது.