இசி தலைவர்: எங்கள் வாக்காளர் பட்டியல் உலகில் மிகவும் தூய்மையானது

வாக்காளர் பட்டியல் மீது பல புகார்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் உலகில் மிகத் தூய்மையான வாக்காளர் பட்டியலை மலேசியா பெற்றுள்ளதாக இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிச் முகமட் யூசோப் பிரகடனம் செய்துள்ளார்.

நேற்று சின் சியூ நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவ்வாறு பிரகடனம் செய்த  அவர், நடப்பு வாக்காளர் பட்டியல் தூய்மையானது என்றும் நம்மைக் காட்டிலும் தூய்மையான வாக்காளர் பட்டியல் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும்  சொன்னார்.

ஆகவே நடப்பு வாக்காளர் பட்டியலை சீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இல்லை என அவர் வாதாடினார்.

வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொதுத் தேர்தலுடன் ஒரே சமயத்தில் தனது மாநிலத் தேர்தல்களை சிலாங்கூர் நடத்தக் கூடாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வழங்கியுள்ள யோசனைக்கு அப்துல் அஜிஸ் பதில் அளித்தார்.

தேசிய அளவில் தேர்தல்கள் நடத்தப்படும் போது சிலாங்கூர் தனது சட்டமன்றத்தைக் கலைத்தாலும் கலைக்கா விட்டாலும் மாநிலத் தேர்தல்கள் பின்னர் நடத்தப்பட்டாலும் கூட பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அதே வாக்காளர் பட்டியலைத் தான் பின்பற்ற வேண்டும் என அப்துல் அஜிஸ் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத் தேர்தல்களை தனியாக நடத்துவது கால விரயம், பண விரயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியலில் காணப்பட்ட 42,000 சந்தேகத்துக்குரிய பெயர்களை (உறுதி செய்ய முடியாமல் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது) இசி தூய்மைப்படுத்தி விட்டதாகவும் அதன் தலைவர் தெரிவித்தார்.

மாற்றம் ஏதும் செய்யப்பட மாட்டாது என இசி பிடிவாதம்

தேசியப் பதிவுத் துறை அந்த விவகாரம் மீது இசி-க்குப் பதில் அளித்துள்ளதாக அவர் சொன்னார். அந்த 42,000 வாக்காளர்களில் 22,000 பேர் தங்களது அடையாளக் கார்டுகளை புதிய 12 இலக்க எண்ணுக்கு மாற்றவில்லை என்றும் 18,000 பேர் பழைய அடையாளக் கார்டுகளை மை கார்டுக்கு மாற்றவில்லை என்றும் அப்துல் அஜிஸ் விளக்கினார்.

அந்தப் பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு இரண்டு மாதங்களுக்கு வைக்கப்பட்டும் தங்களது அடையாளங்களை உறுதி செய்ய யாரும் முன் வராததால் அந்தப் பெயர்களை நீக்குமாறு  எதிர்க்கட்சிகள் இசி-யை வற்புறுத்தி வருகின்றன.

ஆனால் அதனைச் செய்ய இசி மறுத்து வருகிறது. பெயர்களை நீக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என அது கூறிக் கொள்கிறது.

சிலாங்கூரில் உள்ள 1,906,008 வாக்காளர்களில் மூவாயிரம் அல்லது 0.16 விழுக்காட்டினருடைய அடையாளங்கள் மட்டுமே சந்தேகத்துக்குரியவை என அப்துல் அஜிஸ் அந்த சீன மொழி நாளேட்டிடம் கூறினார்.

“ஒர் ஆடையில் சிறிதளவு கறை படிந்துள்ளதால் அந்த ஆடை முழுவதும் அழுக்காக உள்ளது என நீங்கள் சொல்கின்றீர்களா ? அந்தக் கறை மிகச் சிறியது. பக்காத்தான் கருத்துக்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் வாக்காளர் பட்டியலை சீரமைக்கப் போவதில்லை,” என அவர் சொன்னார்.