அரசாங்கம் முழுமையான இலவசக் கல்வியை வழங்குவதற்கு ஆண்டு ஒதுக்கீட்டில் கூடுதலாக 3 பில்லியன் ரிங்கிட்டை சேர்த்தால் போதும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார்.
அந்தத் தொகை, மாணவர்களுடைய வாழ்க்கைச் செலவுகள், தற்போது பொதுப் பல்கலைக்கழக மாணவர்கள் செலுத்தும் கட்டணங்கள், தனியார் பல்கலைக்கழகங்களுக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய எஞ்சியுள்ள கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றை சமாளிக்கப் போதுமானது என்றார் அவர்.
பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது போல அனைத்து டோல் கட்டண சலுகைகளையும் ரத்துச் செய்வதின் மூலம் அந்த நிதியைப் பெற முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
“அதனால் ஆண்டுக்கு 5 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடியும். ஏனெனில் அந்தத் தொகையை சலுகை பெற்ற நிறுவனங்களுக்கு பாரிசான் நேசனல் அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கி வருகிறது.”
“அந்தப் பணம் இலவசக் கல்வியை கொடுப்பதற்கு தேவைப்படும் கூடுதலான 3 பில்லியன் ரிங்கிட்டைக் காட்டிலும் எவ்வளவோ அதிகமாகும்,” என ராபிஸி இன்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பக்காத்தான் யோசனைகள் பற்றியும் அந்த முன்னாள் பெட்ரோனாஸ் முதுநிலை நிர்வாகி விவரித்தார்.
பள்ளிப்படிப்பை முடிக்கின்றவர்களுக்கு அதிகமான தொழில் நுட்ப பள்ளிகளைக் காட்டுவதும் தனியார் உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு சிறப்பு நிதியை உருவாக்குவதும் பக்காத்தான் யோசனைகளில் அடங்கும் என்றார் அவர்.
பொதுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் தகுதி பெற்ற மாணவர்களுக்கு அவர்களுடைய கல்விச் சாதனைகள் அடிப்படையிலும் சமூக பொருளாதார பின்னணியை கருத்தில் கொண்டும் வாழ்க்கை செலவு அலவன்ஸ்கள் கொடுக்கப்படும்,” என்றார் அவர்.
போதுமான கல்வித் தகுதி இல்லாத உயர்ந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் சிறப்பு நிதியிலிருந்து வட்டி இல்லாத கடன்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்புக்களை பெறுவர் என்றும் ராபிஸி தெரிவித்தார்.