அரச மலேசியக் கடற்படை (ஆர்எம்என்) தற்போது உள்ள இரண்டு ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளைப் பராமரிப்பதுடன் நாட்டின் கடல் தற்காப்பு ஆற்றலை மேலும் வலுப்படுத்த இன்னும் அதிகமான நீர்மூழ்கிகளையும் வாங்குவதற்கு எண்ணியுள்ளதாக அதன் தலைவர் அட்மிரல் அப்துல் அஜிஸ் ஜாபார் கூறியிருக்கிறார்.
என்றாலும் அந்தத் திட்டத்தை வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக அண்மைய எதிர்காலத்தில் அமலாக்க முடியாது என அவர் சொன்னார். அத்துடன் நீர்மூழ்கி நடவடிக்கைகளில் கட்ற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும் அனுபவத்தைப் பெறவும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அட்மிரல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
“நீர்மூழ்கிகளைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் இயக்குவதற்கு தேர்ச்சியும் அனுபவமும் தேவைப்படுகிறது,” என அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
கடற்படை 2009ம் ஆண்டும் 2010ம் ஆண்டும் பிரான்ஸிடமிருந்து மொத்தம் 3.4 பில்லியன் ரிங்கிட் பெறும் இரண்டு நீர்மூழ்கிகளை வாங்கியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வரும் அந்த இரு நீர்மூழ்கிகளின் பணித் திறன் பற்றி தாம் மனநிறைவு அடைந்துள்ளதாகவும் அப்துல் அஜிஸ் சொன்னார். படையெடுப்பு, ஊடுருவல் ஆகியவற்றிலிருந்து நாட்டின் தேசியக் கடல்பகுதிகளை பாதுகாக்கும் பணியில் அவை ஈடுபட்டுள்ளன.
“அந்த நீர்மூழ்கிகளில் பயணம் செய்த திரங்கானு சுல்தான் மிஸான் ஜைனல் அபிடின், சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா, பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஆகியோர் உட்பட பல பெருமக்களிடமிருந்து பாராட்டுக் கடிதங்கள் எனக்குக் கிடைத்துள்ளன,” என்றும் அப்துல் அஜிஸ் குறிப்பிட்டார்.
நாளை அரச மலேசியக் கடற்படையின் 78வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது. அது பற்றியும் அவர் குறிப்பிட்டார். “புத்தாக்க சிந்தனை கொண்ட அதிகாரிகள் உருமாற்றத்துக்கு திறவுகோல்” என்பது அந்தக் கொண்டட்டாங்களின் கருப் பொருள் என அவர் தெரிவித்தார்.
புத்தாக்க சிந்தனைகள் வழி கடற்படையை உலகத் தரத்துக்கு உயர்த்தும் இலட்சியத்துக்கு இணங்க அந்தக் கருப் பொருள் அமைந்துள்ளதாகவும் கடற்படைத் தலைவர் சொன்னார்.
-பெர்னாமா