பெர்சே போராட்டம்: சுவாராம் போலீசாரின் நடவடிக்களைக் கண்டிக்கிறது

நேற்றிரவு மணி 9.30 வரையில் 300 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் போலீஸ் பயிற்சி மையத்தில் தடுத்து வைத்துள்ளனர். அவர்களைச் சந்திப்பதற்கு வழக்குரைஞர்களுக்கு அனுமதி வழங்க போலீசார் மறுக்கின்றனர் என்று சுவாராம் என்ற மனித உரிமைகள் கழகம் கூறுகிறது.

பேச்சு உரிமைக்கான சுதந்தரத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியும் அதற்கு மிரட்டல் விடுக்கும் போலீசாரை சுவாராம் கடுமையாக கண்டிக்கிறது என்று சுவாராமின் செயல்முறை இயக்குனர் ஏ.நளினி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

போலீசாரின் இந்நடவடிக்கை அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும் என்று அவர் கூறுகிறார்.

“மலேசிய அரசாங்கம் அனைத்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை தங்களுடைய வழக்குரைஞர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்”, என்று அவர் தமது கூறியுள்ளார்.

உடனடியான நடவடிக்கை தேவை

அரசாங்கத்தின் கைது நடவடிக்கை மற்றும் பேச்சுரிமைக்கு மறுப்பு ஆகியவற்றுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கடிதங்களை அரசாங்கத்திற்கு அனுப்புமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆர்வலர்கள் தங்களுடைய பரப்புரைகளைத் தொடரவும் அரசமைப்புச் சட்டம் பிரிவு 10 வழங்கும் பேச்சுரிமையை மதிக்குமாறும் வலியுறுத்தும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் அளிக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

TAGS: