சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியின் போது கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட போது டாத்தாரான் மெர்தேக்காவில் ஏற்பட்ட குழப்பத்துக்கும் பீதிக்கும் தூண்டி விடும் நோக்கத்துடன் செயல்பட்ட ஏஜண்டுகளே காரணம் என சிலாங்கூர் பாஸ் மகளிர் தலைவி பாரிடா அப்துல் கூறுகிறார்.
வயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்காக இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், ஜாலான் துன் பேராக்கில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் உருவாக்கிய செயற்கை அருவிக்கு அருகில் கூடியிருந்தவர்களுடன் தாமும் இருந்ததாகச் சொன்னார்.
பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமும் விடுத்த தனித்தனி ஆணைகளைத் தொடர்ந்து கூட்டத்தினர் கலைந்து செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது ‘Anwar suruh baling’ (பொருட்களை எறியுமாறு அன்வார் சொல்கிறார்) என எனக்குப் பின்னால் பெர்சே டி சட்டைகளை அணிந்திருந்தவர்கள் சொன்னது கேட்டது.
“எனக்கு அன்வாரை நேரடியாகத் தெரியும் என்பதால் அந்த உத்தரவு சரியாக இருக்காது என நான் நினைத்தேன். இளம் வயதினர் பொருட்களை வீசத் தொடங்கியதும் போலீசார் மேலே இருந்து கூட்டத்தினர் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசத் தொடங்கினர்.
“அங்கு பெடா பாலிங்கைச் சேர்ந்த ஒருவர் உட்பட பல முதியவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனக்குத் தெரியவில்லை.”
கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பீதி அடைந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன.
கோலாலம்பூர் மருத்துவமனையில் நேற்று அவரைச் சந்திக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எண்ணியுள்ளார் என மருத்துவமனை அதிகாரிகளும் போலீசாரும் என்னிடம் தெரிவித்தனர்.
ஆனால் அதனை அனுமதிக்க வேண்டாம் என நான் அந்த அதிகாரிகளிடம் கூறி விட்டதாக பாரிடா சொன்னார்.
“நஜிப் அல்லது உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் என் வார்டுக்கு வந்தால் நான் அவர்கள் மீது காலணிகளை எறிவேன்.”
“இந்தக் குழப்பத்துக்கு அவர்களே காரணம். நான் குந்தியிருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவே வந்தேன். வேறு எதுவும் இல்லை. நாங்கள் ஆயுதங்களை கொண்டு செல்லவில்லை. நான் எனது கைப்பையை மட்டுமே வைத்திருந்தேன். அதுவும் அந்தக் குழப்பத்தில் காணாமல் போய் விட்டது.”
தம்மைப் பார்ப்பதற்கு அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் வந்ததாகவும் தாம் அவரை புறக்கணித்து விட்டதாகவும் பாரிடா சொன்னார்.
“நான் அவருக்கு முகம் கொடுக்கவில்லை. என் பிள்ளைகளைப் போல நானும் அம்னோவைத் தோற்கடிக்க உறுதி பூண்டுள்ளேன்,” என ஐந்து பிள்ளைகளுக்கு தாயுமான கிள்ளானைச் சேர்ந்த அந்த சிலாங்கூர் பாஸ் மகளிர் தலைவி சொன்னார்.