ஜோகூர் மந்திரி புசார் அவமதிக்கிறார், பேராசிரியர் அப்துல் அசிஸ்

மாட் இண்ட்ரா ஒரு சுதந்தர போராட்ட வீரர் இல்லை என்றதன் மூலம் ஜொகூர் மந்திரி புசார் டத்தோ அப்துல் கனி அவரை அவமதிக்கிறார் என சட்டத்துறை பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரி தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் 2004-ல் ஜோகூர் அரசே வெளியிட்ட ‘Pengukir Nama Johor’ நூலில் மாட் இண்ட்ரா மாநிலத்தின் பெயரை உயர்த்தியவர் என குறிப்பிடப்பட்டுள்ளதையும் பேராசிரியர் கூறினார்.
 
ஒரு மாநில மந்திரி புசாராக அந்நூலின் உள்ளடகத்தை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இத்தனைக்கும் அந்நூலுக்கு முன்னுரை எழுதியவரும் அவரே. இப்படி இருக்கும் போது இப்போது மட்டும் மாட் இண்ட்ராவை சுதந்திர போராட்ட வீரர் இல்லை என்பது வெட்கத்துக்குரிய  முட்டாள்தனமான செயலாகும் என பேராசிரியார் கண்டித்துள்ளார்.
 
நேற்று நடந்த நிகழ்வில் 25 காவலரின் உயிரைக் குடித்த புக்கிட் கெப்போங்  தாக்குதலைத் திட்டமிட்டவரே மாட் இண்ட்ராதான் என் கூறியுள்ளார் மந்திரி புசார். அதோடு மலாய்காரர்களை மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சட்டவிரோத போராட்டங்களில் கலந்து கொள்ள தூண்டியவதாகவும்  கூறியுள்ளார். ஆனால் ஜோகூர் மாநிலம் வெளியிட்ட நூலில் அதற்கு மாறான கருத்துகளைக் கொண்டிருப்பதைக் காணும் போது அதன் உண்மை தன்மை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
 
அப்துல் கனியின் இக்கூற்றினால் அம்னோ, ஜோகூர் மற்றும் புத்ராஜெயாவின் நம்பகத்தன்மை கடுமையாக ஆட்டம் கண்டுள்ளதை பேராசிரியர்  குறிப்பிட்டுள்ளார்.