மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி: “எட்டப்பன் வேலை வேண்டாம்!”

நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக்கொண்ட ஷா அலாம் மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தற்போதைய சிலாங்கூர் மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் சகல வசதிகளும் அடங்கிய  புதிய கம்பீரமான புதிய கட்டடத்தை முழுதும் இந்திய குத்தகையாளர்களைக் கொண்டு கட்டி முடித்ததுடன் திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.

நிரந்தரமான தீர்வு கண்ட சிலாங்கூர் அரசு

ஐம்பத்து நான்கு ஆண்டுகால பாரிசான் ஆட்சியில் சாதிக்க முடியாததை, குறிப்பாக மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியைப் பொருத்த வரையில், ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் சிலாங்கூர் மாநில பக்கத்தான் அரசாங்கம் சாதித்துள்ளது. இச்சாதனை இவ்வட்டாரத்தில் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் இந்திய மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலர் மகிழ்ச்சியும் ஆதரவும் தெரிவிக்கையில் சிலர் பொறாமையால் ஆட்கொள்ளப்பட்டு இப்பள்ளியைக் கட்டி முடித்தவர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில அரசின், குறிப்பாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மீதும் அவதூறுகளை, ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர் என்று மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். குமரவேல் நேற்று காலையில் அப்பள்ளிக்கு வெளியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடந்த 100 ஆண்டுகளில் நிரந்தரமான  இடம் இல்லாததால் இப்பள்ளி ஐந்து முறை இடமாற்றம் கண்டது. இப்பள்ளிக்கு ஒரு நிரந்தரமான இடம் பெறுவதற்காக தோட்ட நிருவாகத்துடனும் சிலாங்கூர் மாநில பாரிசான் அரசுடனும் மஇகாவினர், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மற்றும் பல ஆர்வலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்த குமரவேல், இந்த நடவடிக்கைகள் எந்த பலனையும் தரவில்லை என்றார்.

ம இகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலு இப்பள்ளிக்கு புதிய கட்டடம் எழுப்புவதற்கு ரிம2.5 மில்லியன் தருவதாக கூறியிருந்தார். அது என்ன ஆயிற்று என்று அவர் வினவினார்.

மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி எதிர்கொண்ட பிரச்னைகளை ஏராளம். பத்து மாதங்களில் 13 வெள்ளப் பெருக்கை இப்பள்ளி கண்டுள்ளது. இது நாடு அறிந்த செய்தி. ஆனால், இன்று இப்பள்ளியின் புதிய கட்டடம் குறித்து சவால் அறிக்கை விடும் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் டி. மோகன் இப்பிரச்னைகளைத் தீர்த்து வைக்க எதுவும் செய்யவில்லை. ஏன், வந்துகூட பார்க்கவில்லை என்றார் முருகவேல்.

இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குமரவேலுடன் தற்போதைய பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் தலைவர் என். ரவீந்தரன், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் எ.மதுரை மற்றும் தோட்டப் பாதுகாப்பு நடவடிக்கை குழு உறுப்பினர் எம். அல்லி ஆகியோருடன் இதர ஆதரவாளர்களும் இருந்தனர்.

செய்தியாளர் கூட்டத்திற்கு முன்னர் அவர்கள் அவ்விடத்தில் குழுமியிருந்தனர். அவர்கள் பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் வைத்திருந்தனர்.

மிட்லெண்ட்ஸ் புதிய தமிழ்ப்பள்ளியை கட்டும் விவகாரத்தில் ஊழல் நடந்து விட்டதாக இன்று கூவும் மோகனுக்கு பாரிசான் ஆட்சி காலத்தில் இப்பள்ளி சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் தெரியாமல் இருக்க முடியாது என்று கூறிய குமரவேல் சிலவற்றை சுட்டிக் காட்டினார்.

அச்சம்பவங்களில் ஒன்று புக்கிட் ராஜா தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு சைம்டார்பி நிறுவனம் ஒதுக்கிய 5.4 ஏக்கர் நிலம் ஆகும். இது எப்பிங்ஹாம் பள்ளி நில விவகாரம் போன்றதுதான் என்றாரவர்.

ஒதுக்கப்பட்ட 5.4 ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் மட்டுமே புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 2.4 ஏக்கர் நிலத்தை அந்நிறுவனம் அதனிடமே “வேறொருவரின்” தேவைக்காக வைத்திருந்தது.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக அந்த 2.4 ஏக்கர் நிலம் புக்கிட் ராஜா பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று குமரவேல் கூறினார்.

இத்தகவல் குறித்து தொடர்பு கொண்டு  விசாரித்தபோது சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் சைம்டார்பி நிறுவனத்துடன் இந்நிலம் குறித்து பேசினார் என்றும் அதன் விளைவாக அந்த 2.4 ஏக்கர் நிலம் புக்கிட் ராஜா பள்ளிக்கு கொடுக்கப்பட்டது என்று சேவியர் ஜெயக்குமாரின் அலுவலகம் இன்று பின்னேரத்தில் உறுதிப்படுத்தியது.

எட்டப்பன் வேலை வேண்டாம்

மிட்லேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான நிலம் மற்றும் கட்டடம் ஆகியவற்றுக்கான செலவுகள் குறித்த முழு விபரம் வேண்டும். இல்லை என்றால் ஆர்ப்பாட்டம் என்று மோகன் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவர் விரும்பிய நடவடிக்கையை எடுக்கலாம். குறிப்பாக, அவர் ஊழல்தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யலாம். அவர்களை அவர் கையோடு அழைத்து வரலாம் என்று குமரவேல் கூறினார்.

“எங்களைப் பொறுத்தவரையில், மாநில அரசு நிலத்திற்கு எவ்வளவு கொடுத்தது என்பதில் எங்களுக்கு அக்கறை இல்லை. பணம் எங்களிடம் கொடுக்கப்படவில்லை.

“கட்டடத்திற்கான ரிம3 மில்லியன் கட்டப்பட்டு விட்டது.

“மண்டபம் கட்டுவதற்கான முடிவை பெற்றோர்-ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் பள்ளி வாரியம் ஆகியவை கூட்டாக எடுத்தன. அதற்கான செலவு ரிம1.9 மில்லியன். ரிம600,000 திரட்டப்பட்டு விட்டது”, என்று குமரவேல் கூறினார்.

“இப்பள்ளிக்கான செலவுகள் பற்றி தோட்ட மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். வாரிய உறுப்பினர்களில் ஐவர் – மோகன்ராஜ், எண்டி வேலு, கிளாஸிக் சுப்பையா, சீரிய நாதன் மற்றும் என்.குணாலன் – மஇகா உறுப்பினர்கள். இவர்களுக்கு செலவுகள் சம்பந்தமான அனைத்தும் தெரியும்”, என்று குமரவேல் மேலும் கூறினார்.

“ஆகவே, மற்றவர்களின் சாதனையைக் கண்டு வயிற்றெரிச்சல் பட்டு இங்கும் அங்கும் தூண்டி விட்டு எட்டப்பன் வேலை செய்ய வேண்டாம் என்று டி. மோகனை கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.

இறுதிக் குறிக்கோள் கொள்கையை மோகன் எதிர்க்க வேண்டும்

மிட்லேண்ட்ஸ் தோட்ட மக்களுக்கு நீண்ட கால போராட்ட வரலாறு உண்டு என்பதை மோகனுக்கு நினைவூட்ட விரும்புவதாக கூறிய குமரவேல், 1941 ஆம் ஆண்டில் கிள்ளானில் நடந்த தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் பங்கிருந்தது என்றார்.

“மீண்டும் போராட தயங்கமாட்டோம்” என்பதை வலியுறுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

மிட்லேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மீது இவ்வளவு அக்கறை கொண்டு எச்சரிக்கை விடுக்கும் டி. மோகன் தமிழ் மாணவர்களுக்காகவும் தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் இரு முக்கிய விவகாரங்களை உடனடியாகத் தீர்த்து வைக்குமாறு குமரவேல் வேண்டுகோள் விடுத்தார்.

ஒன்று, ஒரு பள்ளியில் ஓர் இஸ்லாமிய மாணவர் மட்டுமே இருந்தாலும் அம்மாணவருக்கு இஸ்லாமிய சமய கல்வி போதிப்பதற்கான அனைத்து வசதிகளையும் அப்பள்ளியில் செய்து தரப்பட வேண்டும். அதே போன்ற வசதிகளை 15 தமிழ் மாணவர்கள் இருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் செய்து தரப்பட வேண்டும்.

இரண்டாவது, தாய்மொழிப்பள்ளிகளை – தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை – மூட வேண்டும் என்ற “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை பாரிசானின் எஜமானரான அம்னோ கடந்த 60 ஆண்டுகளாக நிலைநிறுத்தி வருகிறது. அக்கொள்கையைத் தாம் ஆதரிப்பதாக தற்போதைய கல்வி அமைச்சர் முகைதின் யாசின் பகிரங்கமாக கூறியுள்ளார். “நம்பிக்கை” மன்னர் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அக்கூற்றை மறுக்கவில்லை. இந்தக் கொள்கையை உறுவாக்கியதே நஜிப்பின் தந்தையும் அன்றைய கல்வி அமைச்சருமான அப்துல் ரசாக்தான்.

மிட்லேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்காக போராட தயாராக இருக்கும் டி.மோகன் நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை அம்னோ உடனடியாக கைவிட வேண்டும் என்று அம்னோவுடன் போராட வேண்டும்.

“அம்னோவுடன் போராட டி. மோகன் தயாரா?”, என்று குமரவேல் கேட்டார்.