“போலீஸ் முரட்டுத்தனத்தைப் பற்றி செய்தி வெளியிட வேண்டாம் என முக்கிய நாளேடுகளுக்கு “ஆணையிடப்பட்டது”

போலீஸ் முரட்டுத்தனத்தை காட்டும் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் போட வேண்டாம் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் முக்கிய நாளேடுகளின் உயர் நிலை ஆசிரியர்களுக்கு பெர்சே 3.0க்கு முதல் நாளன்று ஆணையிட்டாரா?

அந்தக் கேள்வியை எழுப்பிய பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகச் சொன்னார்.

“அது உண்மையானால் அது பத்திரிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கிறது. 1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட வெளியீட்டு சட்டத்தை திருத்துவதற்கான அரசாங்க நோக்கம் மீது கேள்வி எழுகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

பெர்சே 3.0 பேரணியின் போது பத்திரிகையாளர்களுக்கு எதிராக போலீசார் வன்முறையாக நடந்து  கொண்டது மீதும் அச்சுறுத்தியது மீதும் அரசாங்கம் கடுமையாக குறை கூறப்பட்டு வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கிறது.

பெர்சே 3.0 பேரணி பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் நிருபர்களை மிரட்டுமாறும் தடுக்குமாறும் கைது செய்யுமாறும் உள்துறை அமைச்சின் உயர் நிலையிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை பிகேஆர் கண்டு பிடித்துள்ளதாக சுரேந்திரன் நேற்று கூறினார்.

பெர்சே 3.0 பேரணியின் போது காயமடைந்தவர்களை கோலாலம்பூர் மருத்துவமனையில் சந்திக்க சென்ற போது அவர் நிருபர்களிடம் பேசினார்.

அவருடன் பிகேஆர் உதவித் தலைவர்களான நுருல் இஸ்ஸா அன்வாரும் சுவா ஜுய் மெங்-கும் சென்றிருந்தனர்.

ஹிஷாமுடினின் விருப்பத்தை போலீசார் நிறைவேற்றியதாகத் தோன்றுகிறது என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டார்.

“பெர்சே 3.0க்கு முதல் நாளன்று தம்மைச் சந்திக்குமாறு எல்லா பெரிய நாளேடுகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் ஹிஷாமுடின் ஆணையிட்டார்.”

“அங்கு அவர்களுக்கு பெர்சே பேரணி பற்றிய செய்திகளை எப்படிப் போட வேண்டும் என்றும் போலீஸ் முரட்டுத்தனம் பற்றிய செய்திகளைத் தவிர்க்குமாறும் கூறப்பட்டது.”

“அந்தக் கூட்டத்துக்கு மறு நாள் போலீசாரின் தவறான நடத்தைகளை பதிவு செய்த பத்திரிக்கையாளர்கள் முன் எப்போதும் நடந்திராத வகையில் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளது மிகவும் கவலை அளிக்கிறது,” என்றார் சுரேந்திரன்.

பெர்சே பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக நிகழ்ந்த கூட்டத்தில் ஊடகங்களுக்கு எத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன என்ற விவரங்களை ஹிஷாமுடின் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என்றும் சுரேந்திரன் விரும்புகிறார்.

“ஏப்ரல் 28ம் தேதி ஊடகங்கள் மீதும் பொது மக்கள் மீதும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட முரட்டுத்தனமான தாக்குதல்கள் பற்றி நஜிப்-பும் ஹிஷாமுடினும் விளக்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.”

டாத்தாரான் மெர்தேக்காவை நீண்ட காலத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமிக்கக் கூடும்  என்ற அச்சம் நிலவியதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நஜிப் கூறினார்.