அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் பெர்சே 3.0 பேரணியின் போது பாதிக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை வில்லன்களாக சித்தரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்வதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
இதுதான் சர்வாதிகார ஆட்சிகளின் இயல்பான குணம் என அவர் சொன்னார்.
“ஒடுக்கப்பட்டதாலும் கொடூரத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை கிரிமினல்களாக காட்டுவதற்கு அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களை சர்வாதிகார ஆட்சிகள் பயன்படுத்துவது வழக்கம்,” என அன்வார் குறிப்பிட்டார்.
“தேசியப் பள்ளிவாசலிலிருந்து நான் மக்களுடன் அணி வகுத்துச் சென்ற போது மக்கள் அரசியல் ரீதியில் விழித்துக் கொண்டு விட்டதை நான் உணர முடிந்தது,” என்றார் அவர்.
“விவேகம், எழுச்சி, நம்பிக்கை ஆகியவற்றைக் காட்டும் சூழ்நிலை அங்கு நிலவியது. அது மிகவும் மெச்சத்தக்க வகையில் அமைதியாக நடைபெற்றது. அது விடுதலைக்கான கொண்டாட்டம். உண்மையாகச் சொன்னால் அங்கு ஒற்றுமை நிலவியது.”
பெர்சே 3.0ஐ அரசாங்கம் ஒடுக்கியது “மிக்க ஏமாற்றத்தை” அளிக்கிறது என அந்த பிகேஆர் மூத்த தலைவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் எந்த ஒரு அரசாங்கத்தின் அரசியல் சட்டப்பூர்வ நிலையையும் ஜனநாயக வழிகளில் மட்டுமே பெற முடியும் என்ற செய்தியை பெர்சே 3.0 வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“எல்லா இனங்களையும் வயதையும் சார்ந்த பெண்களும் ஆண்களும் இளைஞர்களும் உரிமைகளைப் பறித்துக் கொண்டவர்களிடமிருந்து விடுதலையைக் கோருவதற்காக அவர்கள் நீதி உணர்வின் அடிப்படையில் அங்கு முழுமையாக வந்தனர்.”
“அரசாங்க ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் பொய்களினால் நாங்கள் அச்சமடைய மாட்டோம். எங்களிடம் வலுவான திறமையான ஊடகம் உள்ளது. பெர்சே 3.0ன் செய்தியையும் விடுதலை உணர்வையும் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்லும் மக்களே அந்த ஊடகமாகும்,” என அன்வார் மேலும் கூறினார்.