குடிமக்கள்-அல்லாதவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் பாஸ் இளைஞர் பகுதி அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (இசி) சவால் விடுத்துள்ளது.
“அதன் தொடர்பில் பெயர் பட்டியலையும் ஆவணங்களையும் காட்டிக்கொண்டிராமல் சம்பந்தப்பட்ட ஆள்களையும் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்”, என்று இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் மலாய்மொழி நாளேடா சினார் ஹரியானில் கூறியுள்ளார்.
முன்பு மிஸ்மா பற்றி பாஸ் கூறியிருந்ததையும் பின்னர் அதற்கு ஆதாரமில்லை என்று நிறுவப்பட்டதையும் வான் அஹ்மட் சுட்டிக்காட்டினார்.
கோலா சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மிஸ்மா ஒரு வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால், தேசியப் பதிவுத்துறை(என்ஆர்டி) இணையத்தளத்தில் அவர் நிரந்திர வசிப்பிடத் தகுதிகொண்டவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பற்றிய செய்தி வெளிவந்த சில மணி நேரத்தில் மிஸ்மா-வைக் குடியுரிமை பெற்றவராகத் தரம் உயர்த்தி அதைத் தன் வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தது என்ஆர்டி.
29 ஆண்டுகள் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவராக இருந்த மிஸ்மாவுக்கு இவ்வாண்டு ஜனவரியில் குடியுரிமை வழங்கப்பட்டதாக பின்னர் என்ஆர்டி விளக்கம் அளித்திருந்தது.
அந்தச் சம்பவத்தால் மனம் கலங்காத பாஸ் இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் பெயர்களையெல்லாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
ஆகக் கடைசியாக, பச்சை அடையாள அட்டை கொண்ட நால்வர் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் தகவல் ஒன்றை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
பச்சை அடையாள அட்டைகள் மலேசியாவில் பிறந்து மலேசிய பிறப்புச் சான்றிதழை வைத்திருந்தாலும் பெற்றோர் பற்றிய விவரங்கள் தெரியாதவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.
ஆனால், அந்நால்வரில் ஒருவர் 27-வயது யுஸ்னாடி ஹரிஸ் லக்மனா, மலேசியக் குடியுரிமை பெற்றவர் என்று என்ஆர்டி கூறியது.
பொதுமக்கள் பார்க்கக்கூடிய தன் தரவுத்தளம் இற்றைப்படுத்தப்படவில்லை என்பதால் யுஸ்னாடி பச்சை அடையாள அட்டை கொண்டவராகவே குறிப்பிடப்பட்டிருக்கிறார் என்று அது விளக்கமளித்தது.
ஆனால், மற்ற மூவரின் நிலை பற்றி அது இதுவரையிலும் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.