“அரசாங்கம் அதனைச் சுற்றிலும் கூடினபட்சம் கம்பி வேலியை அமைக்கட்டும். நமது போராட்டங்களை மக்களுக்கு நினைவுபடுத்துவதாக அது இருக்க வேண்டும்.”
அம்பிகா: பெர்சே தனது வாக்குறுதியைக் காப்பாற்றியது. ஆனால் போலீசார் அப்படிச் செய்யவில்லை
பூமிஅஸ்லி: போலீசார் பல முறை தாங்கள் அறிவாளிகள் அல்ல என்பதையும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முடியும் என்பதையும் நமக்குக் காட்டியுள்ளனர்.
போலீஸ் படையை இப்போது உள்ள நிலைக்கு மாற்றியவர் முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர். நமக்கு புதிய போலீஸ் தலைவரைக் கொண்ட புதிய அரசாங்கம் தேவை. முழுக்க முழுக்க புதிய போலீஸ் படையும் நமக்குத் தேவை.
பொது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்கு குண்டர்களும் ரௌடிகளும் உதவி செய்யும் அபாயகரமான அரசாங்கத்தை நாம் பெற்றுள்ளோம். நாம் அதனை மாற்ற வேண்டும்.
தயார்: அம்பிகா, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதே போலீஸின் வேலை. அது பெர்சே-க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ளாத சட்டத்தைப் பின்பற்றும் குடி மக்களுக்கே போலீஸ் பதில் சொல்ல வேண்டும்.
போலீசார் அவ்வாறு நடந்து கொள்ளா விட்டால் சட்டத்தை மீறுகின்றவர்களுக்குத் துணிச்சல் அதிகமாகி விடும்.
மோப்1900: போலீசார் ஒரு போதும் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. ஏனெனில் அவர்கள் விரும்பியது அதனைத்தான். தங்களது கைக்கூலிகள் மூலம் தடுப்புக்களை உடைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை அடித்த பின்னர் பெர்சே மீது பழி போடும் திட்டத்தை நிறைவேற்றவே அவர்கள் விரும்பினர்.
இவ்வளவு பேர் காயமடைந்ததற்கு போலீசார் பொறுப்பேற்க முடியாது என அவசரம் அவசரமாக தேசிய போலீஸ் படைத் தலைவரும் உள்துறை அமைச்சரும் அறிக்கை விடுத்ததைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
கெட்டிக்கார வாக்காளர்: எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது பாதுகாப்பு விவகாரம் எப்போதும் பிரச்னையே. போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்கள் தற்காப்பு அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம்.
ஒருவரைத் தலையில் அடிப்பதும் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிப்பதும் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தும் வழி அல்ல. அது பெருத்த அவமானம்.
ஜஸ்டிஸ் பாவ்: மலேசியப் போலீசார் தங்கள் வாக்குறுதிகளை எப்போதும் காப்பாற்றுவதே இல்லை. மக்கள் கூடுவதற்கு முன்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விடுமாறு அம்னோ அவர்களுக்கு ஆணையிட்டுள்ளது.
ஆதாரங்கள் காட்டப்படுவதைத் தடுப்பதற்குப் போலீசார் செய்ததைக் கவனியுங்கள்- பிபிசி, அல் ஜாஸிரா செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. பத்திரிக்கையாளர்களின் கேமிராக்களும் நினைவு கார்டுகளும் நாசமாக்கப்பட்டன. பேரணியைச் சீர்குலைக்க கூலிகள் அமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தாங்கள் அளித்த வாக்குறுதிகளை கைவிடுவதற்கு பிரதமர் நஜிப் ரசாக்கும் அம்னோவும் வகுத்த திட்டத்தின் ஒரு பகுதியே அதுவாகும். அம்னோவையும் அதன் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிகளையும் (போலீஸ்) ஒரு போதும் நம்பவே வேண்டாம்.
அடையாளம் இல்லாதவன்_40c3: அரசாங்கம் டாத்தாரான் மெர்தேக்காவை வைத்திருக்கட்டும் அதனைச் சுற்றிலும் கூடினபட்சம் கம்பி வேலியை அது அமைக்கட்டும். நமது போராட்டங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நினைவுபடுத்துவதாக அது இருக்க வேண்டும்
சிறந்த நாட்டுக்கான நமது போராட்டத்துக்கான மய்யமாக அது திகழட்டும். ஆகவே அதிகாரிகளே டாத்தாரான் மெர்தேக்காவை தொடர்ந்து காவல் புரியுங்கள். கம்பி வேலியை போடுங்கள். அது நீங்கள் யார் என்று தெளிவாகக் காட்டுகிறது.
உங்கள் அடிச்சுவட்டில்: அன்றைய தினம் கடமையில் இருந்த போலீஸ்காரர்களின் சீருடையில் பெயர்கள் இல்லை. சேவை எண்களும் இல்லை. அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் துன்புறுத்தினர். குண்டர்களைப் போல நடந்து கொண்டனர்.
சீருடை அணிந்த போலீஸ்காரர்கள் பெயர்ப் பட்டையையும் சேவை எண்களையும் அணியக் கூடாது என்ற விதிமுறை எப்போது நடப்புக்கு வந்தது ? அது தற்செயலாக நடந்ததா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா ?
கைது செய்யப்பட்டவர்கள் மீது இனத் துவேஷ சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போலீஸ் இப்போது பெர்க்காசாவின் இணைப்பாகி விட்டதா ?
தடுப்புக்களிலிருந்து வெகு தொலைவில் இருந்தவர்கள் மீது கூட கண்ணீர் புகைக் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டுள்ளன. பலர் கிட்டத்தட்ட மயங்கி விட்டனர்.
முஷிரோ: கூடின பட்சம் குழப்பத்தை ஏற்படுத்தி அதற்கு பெர்சே மீது பழி போடுவதே போலீசார், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் அம்னோவின் திட்டம் என்பது ஊரறிந்த விஷயம்.
ஜாலான் துன் பேராக்கில் கூடியிருந்த 250,000 மக்கள் கலைந்து செல்வதற்கே இரண்டு மணி நேரம் பிடிக்கும்.
மஸ்ஜித் ஜாமெய்க், டாங் வாங்கி எல்ஆர்டி நிலையங்களை மூடியது அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கை ஆகும். மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதும் நீரைப் பாய்ச்சியதும் கொடுமையான நடவடிக்கைகள் ஆகும்.
ஆகவே இது ‘Rakyat di Dahulukan’ (மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்) அரசாங்கம் அல்ல. மோசடிகள் மூலம் தேர்தலில் பெருத்த வெற்றி அடைந்து அதிகாரத்தில் நிலைத்திருக்க எண்ணும் அரசாங்கம் இதுவாகும்.