பிபிசி செய்தியை தணிக்கை செய்ததை ஆஸ்ட்ரோ ஒப்புக் கொள்கிறது

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி மீதான பிபிசி செய்தியை தணிக்கை செய்ததை ஆஸ்ட்ரோ ஒப்புக் கொண்டுள்ளது.

“தேசிய உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்க” தான் அவ்வாறு செய்ததாக அந்தத் துணைக் கோள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் கூறியது.

பிபிசி செய்தி தணிக்கை செய்யப்பட்ட தகவலை அம்பலப்படுத்திய சரவாக் ரிப்போர்ட் என்னும் இணையத் தளத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஆஸ்ட்ரோ, தான் ஒளிபரப்பும் அனைத்துலக அலைவரிசைகளை தணிக்கை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளதாக ஆஸ்ட்ரோவின் ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கான முதுநிலை உதவித் தலைவர் ரோஹைஸாட் முகமட் குறிப்பிட்டுள்ளார்.

“அனுமதி பெற்ற ஒளிபரப்பாளர் என்னும் முறையில் ஆஸ்ட்ரோ தேசிய உள்ளடக்க விதி முறைகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது.”

“அனைத்துலக ஒளிபரப்புக்களை வழங்கும் நிறுவனங்களைப் பெறுத்த வரையில் தேசிய உள்ளடக்க விதிமுறைகளுக்கு ஏற்ப அவற்றின் அலைவரிசைகளை தணிக்கை செய்யும் உரிமையை ஆஸ்ட்ரோ பெற்றுள்ளது,” என்றார் அவர்.

என்றாலும் அந்த உள்நாட்டு உள்ளடக்க விதிமுறைகள் என்ன என்பதை ரோஹைஸாட் விளக்கவில்லை.

பிபிசி குறித்து ஆஸ்ட்ரோ ஏமாற்றம் அடைந்துள்ளது

தணிக்கை செய்யப்பட்டுள்ளது குறித்து சரவாக் ரிப்போர்ட் தகவல் கொடுத்த பின்னர் “உண்மைகளை” அறிந்து கொள்வதற்காக “அவசரமான விசாரணைகள்” தொடங்கப்பட்டுள்ளதாக பிபிசி விடுத்த அறிக்கை கூறியது.

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படும் வாரத்தில் சுதந்திரமான, பாகுபாடற்ற செய்திகளை பெறுவதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்தைத் தருகிறது என்றும் பிபிசி அறிக்கை குறிப்பிட்டது.

விநியோகப் பங்காளிகள் வழி உட்பட உலகம் முழுவதும் நாங்கள் ஒளிபரப்பும் நம்பிக்கைக்குரிய செய்திகள் தடுக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என அந்த பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் கூறியது.

அந்த அறிக்கை ஆஸ்ட்ரோவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

“எங்களுடைய நீண்ட கால பங்காளியான பிபிசி அறிக்கையை வெளியிடும் போது உள்நாட்டு உள்ளடக்க விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதை கவனத்தில் கொள்ளாதது குறித்து நாங்கள் வியப்படைந்துள்ளோம்.ஒரளவு ஏமாற்றமும் அடைந்துள்ளோம்,” என ரோஹைஸாட் கூறினார்.