சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைமைத்துவம் இன்று கைகளில் மஞ்சள் நிறத் துண்டுகளை அணிந்து கொண்டு பெர்சே 3.0 பேரணியின் போது பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் காட்டிய முரட்டுத்தனத்தைக் கண்டிக்கும் பல பத்திரிக்கை அமைப்புக்களுடன் சேர்ந்து கொண்டது.
மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிருபர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மந்திரி புசார் காலித் இப்ராஹிம், முதுநிலை ஆட்சி மன்ற உறுப்பினர் தெரெசா கோக், ஆட்சி மன்ற உறுப்பினர்களான இயான் யோங் ஹியான் வா ஆகியோர் அங்கிருந்த நிருபர்கள் கேட்டுக் கோண்டதற்கு இணங்க மஞ்சள் நிற துண்டுகளை கைகளில் அணிந்திருந்தனர்.
அந்த நிருபர்கள் சந்திப்புக்கு முன்னதாக சில பத்திரிக்கையாளர்கள் மஞ்சள் துணியை துண்டுகளாக வெட்டி அங்கிருந்த மற்ற ஊடகப் பேராளர்களிடம் கொடுத்தனர்.
“நாளை உலக பத்திரிக்கை சுதந்திர தினம். தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுடன் எங்களுடைய ஒருமைப்பாட்டைக் காட்டுவதற்காக நாங்கள் கறுப்பு நிற ஆடை அணிவோம். மஞ்சள் நிறத் துண்டைக் கைகளில் கட்டியிருப்பொம்,” என அந்த நடவடிக்கையைத் தொடங்கிய சிலாங்கூர் டைம்ஸ் நிருபர் கூறினார்.
போலீஸ் முரட்டுத்தனம் பற்றிக் குறிப்பிட்ட காலித், பத்திரிக்கையாளர்களுக்காக தாம் வருந்துவதாகச் சொன்னார். தாக்குதல்களைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.
“மாற்றங்களை” கொண்டு வர சமுதாயத்தின் எல்லாப் பிரிவுகளும் ஒன்றிணையும் நேரம் வந்து விட்டது,” என்றும் காலித் குறிப்பிட்டார்.
“பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் சமூகத்தின் அறிவாற்றலுக்கு மதிப்புக் கூட்டுகின்றீர்கள். அதனால் மக்கள் நல்ல முடிவுகளை எடுக்க முடிகிறது.”
“சுதந்திரமான ஊடகங்கள் இல்லாவிட்டால் தகவல் அறிந்த சமுதாயம் இருக்கவே முடியாது,” என்றார் அவர்.
இதனிடையே பிஎன் தலைமையிலான கூட்டரசு அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுமாறு சிலாங்கூரில் உள்ள பள்ளிக்கூடங்கள், மாணவர்களுக்குப் போதிப்பதாக கூறப்படுவதை காலித் மறுத்துள்ளார்.
“நாங்கள் பள்ளிக்கூடங்களுக்கு உள்ளேயே போக முடியாது. அத்தகைய ஆணையை எப்படி நாங்கள் பிறப்பிக்க முடியும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் ?” என அவர் வினவினார்.
சிலாங்கூரில் பக்காத்தான் சார்பு வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக பள்ளிவாசல் குழுக்களுக்கான தேர்தல்கள் ஆவி வாக்காளர்கள் வழி கறை படிந்துள்ளதாக உத்துசான் மலேசியாவில் வெளியான தகவலையுகம் காலித் நிராகரித்தார்.