அஸ்மின் உத்துசானிடமிருந்து 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருகிறார்

‘கழிப்பறை ஏற்பாடு’ ஒன்றில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக நேற்று முதல் பக்கச் செய்தியாக வெளியிட்ட உத்துசான் மலேசியாவிடமிருந்து இழப்பீடாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி 100 மில்லியன் ரிங்கிட் கோரியுள்ளார்.

அந்தத் தகவலை அஸ்மினுக்கு வழக்குரைஞராக செயல்படும் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் இன்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதற்கான கோரிக்கை கடிதம் அந்த ஏட்டின் வெளியீட்டாளர்களான உத்துசான் மிலாயு சென் (மலேசியா)பெர்ஹாட்டுக்கும் அதன் ஆசிரியருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தக் குற்றச்சாட்டு மீட்டுக் கொள்ளப்படுவதோடு அந்த நாளேட்டின் முதல் பக்கத்தில் மன்னிப்புக் கேட்கும் செய்தி வெளியிடப்பட வேண்டும் என்றும் அஸ்மின் கோரியுள்ளார்.

“அந்தக் குற்றச்சாட்டுக்களின் கடுமையான தன்மையைக் கருத்தில் கொண்டும் நாடு தழுவிய நிலையில் அந்த ஏடு விற்கப்படுவதையும் கருத்தில் கொண்டும் அஸ்மின் அலி 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளார்,” என்றார் சுரேந்திரன்.

அந்தப் படங்கள் ஜோடிக்கப்பட்டவை என்பதும் அரசியல் நோக்கத்தைக் கொண்டவை என்பதும் தெளிவாகத் தெரிவதாக அவர் மேலும் கூறினார்.

“அது மட்டரகமான இதழியல் முறையாகும். வழக்கம் போல பிஎன்-னுக்குச் சொந்தமான ஊடகங்களிலும் அம்னோ சார்பு வலைப்பதிவுகளிலும் அந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.”

“உத்துசான் மலேசியா வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தப் படங்களை வெளியிட்டுள்ளது,” என்றார் சுரேந்திரன்.

பிரதமர் சம்பந்தப்பட்டுள்ளார்

அந்தப் படங்கள் வெளியிடப்பட்டதற்கு பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“நஜிப்பின் ஒப்புதலும் அங்கீகாரமும் இல்லாமல் உத்துசான் மலேசியா இவ்வளவு பெரிய அளவுக்கு ஒருவருடைய நடத்தைக்கு களங்கத்தை ஏற்படுத்த முயன்றிருக்க முடியாது. நஜிப்பின் அம்னோ ஆளும் கட்சிக்கு உத்துசான் மலேசியா சொந்தமானதாகும்.”

அம்னோ சார்பு வலைப்பதிவுகள் கூறியிருப்பது போல தாம் எந்தத் தொடர்பிலும் சம்பந்தப்படவில்லை என அஸ்மின் விடுத்துள்ள மறுப்பறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உத்துசான் மலேசியாவின் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

என்றாலும் அந்த கட்டுரையுடன் அஸ்மின் என வலைப்பதிவுகள் கூறிக் கொள்ளும் ஒர் ஆடவர், மாது ஒருவருடன் இருக்கும் பல படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.   தமக்கு எதிராக அண்மைய காலமாக தொடுக்கப்பட்டு வரும் பல குற்றச்சாட்டுக்களில் ‘கழிப்பறை ஏற்பாடு’ கடைசியானது என்றும் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.