அம்னோ மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் பேரணி ஒன்றை நடத்தும்

அம்னோவின் 66வது ஆண்டு நிறைவை ஒட்டி மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் நடைபெறும் மாபெரும் கூட்டம் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் வலிமையைக் காட்டுவதாக அமையும் என அந்தக் கட்சியின் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

மற்றவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்தாமல் நூறாயிரக்கணக்கான அம்னோ உறுப்பினர்கள் அமைதியாக ஒன்று கூட முடியும் என்பதையும் அந்தக் கூட்டம் மெய்பிக்கும் என்றும் அவர் சொன்னார்.

“அம்னோவின் தோற்றமும் கட்சியின் 66வது ஆண்டு நிறைவும் நாம் ஒன்று கூடுவதற்கு நல்ல வாய்ப்பைத் தந்துள்ளது. நாம் சில காலமாக பெரிய அளவில் ஒன்றுதிரளவில்லை.”

“நாம் அவ்வாறு செய்வதற்கு இதுவே தக்க தருணம். தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே கடந்த பல ஆண்டுகளில் அம்னோ செய்துள்ளதை மக்களுக்கு நாம் எடுத்துக்காட்டுது பொருத்தமானதாகும்,” என்றும் அவர் சொன்னார்.

நஜிப், அம்னோ ஆன்லைன் ( Umno-Online) இணையத் தளத்துக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டி இன்று வெளியாகியுள்ளது.

இந்த நாட்டில் மிகப் பெரிய கட்சி ஒன்றில் ஒர் அங்கமாக இருப்பது குறித்து அம்னோ உறுப்பினர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“அம்னோ மலாய்க்காரர்களுக்காக ஆசீர்வதிக்கப்பட்ட கட்சி என்பதை நம் அனைவருக்கும் அனைத்து அம்னோ உறுப்பினர்களுக்கும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நாட்டில் மிகப் பெரிய கட்சியாக விளங்கும் அம்னோ என்ற குடும்பத்தில் ஒர் உறுப்பினர் என்பதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.”

“நாம் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதக் கூடாது, நெருக்கப்படுவதாக உணரக் கூடாது. காரணம் இந்த நாடு இன்று அனுபவிக்கின்ற அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாக அம்னோவும் அதன் சிறிய,பெரிய தலைவர்களும் செய்த காரியங்களினால் விளைந்தவை,” என்றார் அவர்.

‘அம்னோ: மக்களுடைய பாதுகாவலன்’ என்னும் கருப்பொருளைக் கொண்ட அம்னோவின் 66வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் மே முதல் தேதி தொடக்கம் 13 நாட்களுக்கு நடைபெறும்.

பெர்னாமா