இணையத்தளங்களைத் “தீக்கிரையாக்குவோம்”, மிரட்டுகிறார் செனட்டர் எஸ்ஸாம்

இஸ்லாத்தை தற்காக்க தாம் போராடப்போவதாக அம்னோ செனட்டர் முகமட் எஸ்ஸாம் முகமட் நூர் இன்று (ஆகஸ்ட் 12) கூறினார். அப்போரில் இஸ்லாத்தின் எதிரிகளின் முகவர்களாக செயல்படும் செய்தி இணையத்தளங்களும் அடங்கும் என்று அவfர் கூறிக்கொண்டார்.

“சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகவுக்கு (ஜயிஸ்)எதிரான பண்பற்ற நடத்தையை அவர்கள் (இஸ்லாத்தின் எதிரிகள்) நிறுத்தாவிட்டால், அவர்களின் முகவர்களை – மலேசியாகினி மற்றும் மலேசியன் இன்சைடர் – பயன்படுத்தினால், நமது சமயத்தைத் தற்காப்பதற்காக நாங்கள் முழுமையான போரைத் தொடங்குவோம் என்று இங்கு நாங்கள் கூறுகிறோம்.

“மலேசியாகினி, மலேசியன் இன்சைடர், நாங்கள் உங்களுக்கு இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கிறோம். எங்களுடைய எச்சரிக்கை கடுமையான ஒன்றாகும். இந்த அறிவற்ற செயலை நீங்கள் நிறுத்தாவிட்டால், நாங்கள் உங்களைத் தீக்கிரையாக்குவோம்!”, என்று எஸ்ஸாம் அறிவித்தார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் நெருங்கிய தோழரும் இன்று அவரின் பரம எதிரியுமான எஸ்ஸாம், கடந்த வாரம் சிலாங்கூர் சமய அமலாக்க அமைப்பு டமன்சாரா மெதடிஸ்ட் தேவாலயத்தில் திடீர்ச்சோதனை நடத்தியது    பற்றிய செய்திகளால் ஜயிஸ் இன்னலில் சிக்கிக்கொண்டுள்ளது. அதற்காக செய்திகளை வெளியிட்ட இந்த இணையதளங்கள் மீது அவர் குற்றம் சுமத்தினார்.

ஷா அலாம், சிலாங்கூர் மாநில மசூதியின் வளாகத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்ட  உணர்ச்சிகரமான கூட்டத்தில் எஸ்ஸாம் இந்த மிரட்டலை விடுத்தார்.

அக்கூட்டத்தில் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிப்லி நோர்டின் மற்றும் சிவப்பு பேட்ரியட் டி-சட்டை அணிந்திருந்த அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் லோக்மான் நோர் அடாம் ஆகியோரும் இருந்தனர்.

அன்வாரின் இன்னொரு முன்னாள் தோழரான சுல்கிப்லி, எஸ்ஸாமின் எச்சரிக்கையை எதிரொலித்ததோடு அந்த இணையதளங்களில் பணிபுரியும் முஸ்லிம்கள் நடந்ததற்கு “வருந்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“மலேசியாகினி மற்றும் மலேசியன் இன்சைடர் ஆகியவற்றின் பிரதிநிதிகளை இங்கு இருப்பதை நான் பார்க்கிறேன். அவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள், வருந்த வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.

“நீங்கள் கொள்கை பரப்பினர் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகள் ஆகியோரின் கீழ்த்தர தகரர்கள். நமக்கு எதிராக இருக்கும் நாத்திகர்களின் தகரர்களாக இருக்காதீர்கள்”, என்றாரவர்.

பதாதைகளை வைத்திருந்த அக்கூட்டத்தினர் “இஸ்லாம் நீடூழி வாழ்க” மற்றும் “தாக்பிர்” என்றும் முழங்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு பதாகையில் “Faith Sale, Religion Sale” என்ற வாசகங்களுடன் ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட்டின் தலை மலக்கூடுலிருந்து தொங்குவது போன்ற படமும் பொரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு பதாகையில் “Ban English language Bibles” என்றும் எழுதப்பட்டிருந்தது.

அவமதிக்கும் முஸ்லிம் அல்லாதவர்கள்

பல ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் முகங்களைப் போன்ற போலிமுகமூடிகளை அணிந்திருந்ததோடு விளம்பர அட்டைகளையும் வைத்திருந்தனர். அவற்றில் ஒன்று “(சிலாங்கூர் மந்திரிபுசார்) காலிட் இப்ராகிம் தலைமைச் சமயகுரு” என்ற வாசகத்தைக் கொண்டிருந்தது.

முன்னதாக, இஸ்லாத்தை மதிக்காதவர்கள் என்று தாம் கருதியவர்களை எஸ்ஸாம் கடுமையாகத் தாக்கினார். அந்த வரிசையில் சிலாங்கூர் மாநில அரசின் முக்கியமானவர்களை அவர் வைத்தார்.

“முஸ்லிம் அல்லாதவர்கள் பற்றி நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், நம்மையும் நமது சமயத்தையும் அவமதிக்கும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் நமக்கு பெரும் பிரச்னைகள் இருக்கின்றன. முஸ்லிம்களை மதமாற்றம் செய்யும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் நமக்குப் பெரும் பிரச்னைகள் இருக்கின்றன.

“அவர்களிடம் நமக்குப் பெரும் பிரச்னைகள் இருக்கின்றன. அதிலும் அவர்கள் அரசாங்க ஆட்சிக்குழுவினர் என்றால் – ரோனி லியு, தெரசா கோக், சேவியர் (ஜெயக்குமார்), எலிசபெத் வோங் – உங்களுடன் எங்களுக்குப் பெரும் பிரச்னைகள் இருக்கின்றன. நாங்கள் முழுமையாக இறங்குவதற்கு முன்பு நிறுத்தி விடுவது உங்களுக்கு நல்லது”, என்று எஸ்ஸாம் கூறினார்.

பின்னர், சுல்கிப்லி தேவாலயத்தில் ஜயிஸ் நடத்திய திடீர்ச்சோதனைக்கு அவரது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“தேவாலயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்படி, அந்த தேவாலயம் சட்ட விரோதமானது. அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை”, என்றாரவர்.

நாளை தொடங்கி இது போன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த தேவாலயத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் போலீஸ் புகார்கள் செய்வார்கள். மேலும், மதமாற்றம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சுல்தானுடன் ஒரு சந்திப்பிற்கு ஆவன செய்யப்படும் என்று சுல்கிப்லி மேலும் கூறினார்.