மோவதேசா: கோமாளி, வரலாறு படைத்த முதலாவது தமிழ்ப்பள்ளி என பாராட்டப்படும் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி குழப்படியாக உள்ளதாமே?
கோமாளி: மோவதேசா! உனக்கு பதில் எழுத என் பேனா வெட்கப்படுகிறது. எழுதினால் தூக்கு மாட்டிக் கொள்வேன் என மிரட்டுகிறது. நானோ, உன்னைப் போன்றவர்களால் தமிழ் இனமே தூங்கி விடும் என்பதால் எழுதுகிறேன்.
மோவதேசா! நீ எதை மனதில் கொண்டு குழப்படி என்கிறாய்?
சுமார் 80 சதவிகித தமிழர்கள் தோட்டப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு துரத்தப்பட்ட வேளையில், 365 தமிழ்ப்பள்ளிகள் அழிக்கப்பட்ட சூழலில், நமது நாட்டின் சொத்துடமை பத்து கோடி மடங்கு மேம்பாடடைந்த நிலையில், தமிழர்கள் மட்டும் ஏன் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதற்கான பல காரணங்களில் ஒன்று, மோவதேசா உன்னைப் போன்றோர்களின் “ஒற்றுமை” சிந்தனைதான்.
இந்த விநோதமான “ஒற்றுமை” சிந்தனைப்பற்றி ஒரு நண்டு கதையுண்டு.
ஓர் அனைத்துலக நண்டுகள் கண்காட்சியில் பல வகையான நண்டுகளை அழகான பாத்திரங்களில் காட்சிக்காக வைத்திருந்தனர்.
அவை பாத்திரங்களை விட்டு வெளியேறி ஓடி விடாமல் இருக்க கண்ணாடியில் மூடி இருந்தன. ஆனால், ஒரு பாத்திரத்தை மட்டும் மூடவில்லை. அதில் இருந்த நண்டுகள் மட்டும் உள்ளேயே ஓடிக்கொண்டு இருந்தன. ஆனால், மற்ற பாத்திரங்களில் இருந்த நண்டுகள் பாத்திரத்தின் மூடிவரை வந்து முட்டிக்கொண்டு நின்றன.
மூடாத பாத்திரத்தை கண்ட பார்வையாளர்கள் வியந்தனர். இவை எப்படி மூடியில்லாவிட்டாலும் ‘ஒற்றுமையாக’ உள்ளேயே ஓடிக்கொண்டுடிருக்கின்றன என வினவினர். அதற்கு பதிலளித்த கண்காட்சி நிர்வாகி, “இது ஒரு விநோதமான நண்டு வகை இவைகளிலிருந்து எந்த நண்டும் வெளியேறி விடாமல், அவைகளே பார்த்துக்கொள்ளும். ஏதாவது ஒன்று முயற்சி எடுத்து முன்நின்றால் அவையிடையே உள்ள அறிவுஜீவி நண்டுகள் அதன் கால்களை வாரிவிடும்” என்றார்.
மோவதேசா, கண்காட்சியாளருக்கு உன் போன்ற நண்டுகள் அதிகம் தேவை, ஆனால் கோமாளிக்கு உன்னைப் போன்ற நண்டுகளை ரசம் செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது.