அம்னோ பாரு 1988ம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டதால் அதற்கு இப்போது வயது 24 தான். ஆனால் அது தனது 66வது ஆண்டு நிறைவை இப்போது கொண்டாடுகிறது. மூல அம்னோ கட்சியின் பதிவு அதிகாரப்பூர்வமாக திட்டமிடப்பட்டு ரத்துச் செய்யப்பட்டது. அந்தக் காரணத்தின் அடிப்படையில் அம்னோ பாருவில் உறுப்பினர்களாக இருப்பதற்கு முதலாவது மூன்றாவது பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மானும் ஹுசேன் ஒனும் மறுத்து விட்டார்கள்.
அது எப்படி இருந்தாலும் சரி. இன்றைய அம்னோ மலேசிய அரசியலை படு பாதாளத்துக்குள் தள்ளி விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு நேற்று நிகழ்ந்த அவமானத்தைத் தருகின்ற இரண்டு நிகழ்வுகளைக் கூறலாம்.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட “ஈமச் சடங்குகள்”, பெர்சே 2.0ன் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய தனிமை (Privacy) மீறப்பட்டுள்ளது ஆகியவையே அந்தச் சம்பவங்களாகும்.
முதல் சம்பவத்தில் பின்ஹோர்ன் சாலையில் உள்ள லிம்-மின் வீட்டிற்கு முன்பு காலை மணி 10.20 வாக்கில் 30 பெர்க்காசா உறுப்பினர்கள் கூடி, 15 நிமிடங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த வீட்டின் நுழைவாயிலில் லிம்-மின் சுவரொட்டிகளை வீசினர். அடுத்து மலாய் சமூகத்துக்கு அவரது ‘மரணத்தை’ குறிக்கும் வகையில் மலர் மாலை போடப்பட்ட லிம்-மின் படத்தை நுழைவாயிலில் மாட்டினர்.
போலீஸ் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது தான் இதில் மிகவும் வருத்தத்தைத் தருகின்ற விஷயமாகும்.
பெர்க்காசா நடத்திய “ஈமச் சடங்குகள்” லிம்-முக்கு “கொலை மருட்டல்” என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
வேறு விதமாக நடந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்
“அத்தகைய ‘ஈமச் சடங்குகள்’ அல்லது ‘கொலை மருட்டல்’ ஆர்ப்பாட்டம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அமைச்சர்கள் அல்லது அம்னோ/பாரிசான் நேசனல் மந்திரி புசார்கள்/முதலமைச்சர்கள் வீடுகளுக்கு முன்பு நடந்திருந்தால் போலீசார் அதே போன்று கைகளைக் கட்டிக் கொண்டிருப்பார்களா ?”
வெட்கக்கேடான அத்தகைய நடத்தைக்கு மற்ற பாரிசான் சேசனல் உறுப்புக் கட்சிகள் மறைமுகமாக ஆதரவு அளிப்பது மிகவும் அதிர்ச்சியைத் தருகிறது. அதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் மசீச தேசிய ஏஜண்டு ஒருவர் வெளிப்படையாக அந்த ‘ஈமச் சடங்கை’ அல்லது ‘கொலை மருட்டலை’ இணையத்தில் அங்கீகரித்துள்ளதாகும்
ஆகவே மசீச அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், தலைவர்கள் வீடுகளுக்கு வெளியில் அது போன்ற ‘ஈமச் சடங்கை’ அல்லது ‘கொலை மருட்டலை’ நடத்துவதற்கு அந்த மசீச தேசிய ஏஜண்டு ஒப்புக் கொள்கிறாரா ?
இரண்டாவது சம்பவத்தில் இக்லாஸ் என்னும் சிறு வணிகர் அமைப்பு கோலாலம்பூர் புக்கிட் டமன்சாராவில் உள்ள அம்பிகா வீட்டுக்கு வெளியில் ஏப்ரல் 28ல் பெர்சே 3.0ன் ‘குந்தியிருப்பு போராட்டத்தின்’ போது வருமான இழப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு பேர்கர் கடையை அமைத்தது.
அவமானத்தைத் தருகின்ற அந்த இரு சம்பவங்களும் மலேசிய அரசியல் மிகவும் தாழ்ந்து விட்டதைக் குறிக்கின்றது. துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக், ஹுசேன் ஒன் அல்லது நான்காவது, ஐந்தாவது பிரதமர்களான டாக்டர் மகாதீர் முகமட், அப்துல்லா ஆகியோரின் காலத்தில் கூட அது நடந்திருக்காது.
மலேசியாவின் ஆறாவது பிரதமரான நஜிப் ரசாக் காலத்தில் அவை ஏன் நிகழ்கின்றன ?
‘உலகில் தலை சிறந்த ஜனநாயகமாக’ மலேசியா திகழ வேண்டும் என தாம் விரும்புவதாக நஜிப் கூறியதின் அர்த்தம் இது தானா ?
லிம் குவான் எங்-கிற்கும் அம்பிகாவுக்கும் எதிராக நேற்று நடத்தப்பட்டுள்ள அந்த இரண்டு வெட்கக்கேடான சம்பவங்கள் மலேசிய அரசியல் படு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விட்டதைக் கண்டு இன, சமய, அரசியல் சார்பு, வர்க்க, வயது வேறுபாடின்றி நாகரிகமான பண்புகளைக் கொண்ட மலேசியர்கள் ஆத்திரமடைந்துள்ளனர் என்பதை நஜிப்பும் அம்னோ/பாரிசான் நேசனல் தலைவர்களும் அறிவார்களா ?
——————————————————————————–
லிம் கிட் சியாங், ஈப்போ தீமோர் எம்பி ஆவார்