சினார் ஹரியான்: நாடாளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்படலாம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு ஜுன் 9ம் தேதி 13வது பொதுத் தேர்தலை நடத்துவார் என மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான் எதிர்பார்க்கிறது.

மூன்று நாட்களுக்கு நடைபெற்ற அம்னோ 66வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் நஜிப் 100,000 உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றி வலிமையைக் காட்டிய பின்னர் அந்தத் தகவலை சினார் ஹரியான் வெளியிட்டுள்ளது.

நஜிப் நாளை அகோங்கைச் சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலை நாடுவார் என அந்த ஏடு ஆரூடமாகக் கூறியது. என்றாலும் அது பெரும்பாலும் செவ்வாய்க் கிழமை நிகழக் கூடும் என்றும் அது குறிப்பிட்டது.

அந்த ஏடு தனது செய்திக்கு பல அம்னோ உள் வட்டாரங்களையும் அரசியல் ஆய்வாளர்களையும் மேற்கோள் காட்டியுள்ளது. அத்துடன் அந்த ஊகங்களுக்கு மே 28ம் தேதி தொடங்கும் பள்ளிக்கூட விடுமுறைகள் ஆதாரமாக இருப்பதாகவும் அந்த ஏடு குறிப்பிட்டது.

மே 26ம் தேதி வேட்பாளர் நியமன நாளாக இருக்கும் என சில வலைப்பதிவுகளிலும் குறுஞ்செய்திகளிலும் ஆரூடம் கூறப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்கு 14 நாட்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

“எனக்குக் கிடைத்த தகவலின் படி, பிரதமர் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போகிறார்,” என பிஎன் உறுப்புக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அந்த நாளேட்டிடம் தெரிவித்தார்.

பிரதமர் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் செல்லத் திட்டமிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய போது அடையாளம் கூற விரும்பாத அந்தத் தலைவர் “அந்தப் பயணங்கள் வழக்கமானவை. இது (தேர்தல்கள்) மிக முக்கியமானவை,” எனப் பதில் அளித்தார்.

பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்

நஜிப் நாளை லண்டனில் பிரபலமான 02 அரங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கு “நமது பிரதமருடன் ஒரு மாலைப் பொழுது” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவில் தமது புதல்வர் நோர் அஷ்மானின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் அவர் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிப்பதற்காக ஸ்பெயினுக்குச் செல்வார்.

இதனிடையே சினார் ஹரியான் ஆரூடம் கூறியுள்ள வேளையில் அறுவடைத் திருநாட்கள் கொண்டாடப்படுவதால் அந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதை சபா, சரவாக்கில் உள்ள பிஎன் தலைவர்கள் விரும்பவில்லை என தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

நஜிப் இந்த வாரம் தேர்தல்களுக்கான அறிவிப்புக்களை இந்த வாரம் விடுத்தால் தாம் “ஆச்சரியப்படப் போவதில்லை” என மெர்தேக்கா மய்யம் என்ற சுயேச்சைக் கருத்துக் கணிப்பு மய்யத்தின் நிர்வாக இயக்குநர் இப்ராஹிம் சுபியான் சொன்னதாகவும் சினார் ஹரியான் குறிப்பிட்டுள்ளது.

இப்ராஹிமின் கருத்துக்களை ஒப்புக் கொண்ட மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிவமுருகன் பாண்டியன், ரமதானுக்கு முன்னதாக பெரும்பாலும் ஜுன் மாதத் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நிகழக் கூடும் எனச் சொன்னார்.

ரமதான் மாதம் ஜுலை மாதம் மூன்றாவது வாரத்தில் தான் தொடங்க வேண்டும். என்றாலும் நஜிப் மே மாத இறுதியில் தொடங்கி ஜுன் தொடக்கம் வரையில் நீடிக்கும் பள்ளிக்கூட விடுமுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு தேர்தல்களை நடத்துவார் என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே தேவான் ராக்யாட் ஜுன் 11ம் தேதி தொடக்கம் ஜுன் 28ம் தேதி வரையில் கூடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.