பொது மக்களைத் தவறாக வழி நடத்தியதற்காக இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப், துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் ஆகியோருக்கு எதிராக பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மாட் ஜைன் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அஜிஸ் முன்னாள் அம்னோ உறுப்பினர் என்பதை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸே உறுதி செய்துள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்றார் அவர்.
“அம்னோ உறுப்பினராக இருப்பது குற்றமல்ல. ஆனால் யாங் டி பெர்துவான் அகோங்கிடமிருந்து அதனை மறைத்தது தான் குற்றம் என கடந்த வாரம் தாம் பிரதமருக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அப்துல் அஜிஸின் நியமனம் ஒரு மோசடியாகும். அது குற்றவியல் சட்டத்தின் 415வது பிரிவின் கீழ் “ஏமாற்றியது” என அர்த்தமாகும்.”
“அந்த இசி தலைவருடைய உறுப்பியம் காலாவதியானாலும் காலாவதியாக விட்டாலும் பஞ்சாயத்து மன்றத்தை நஜிப் அப்துல் ரசாக் அமைப்பதற்கு காரணம் இருக்கிறது.”
தாம் அம்னோ உறுப்பினர் என்பதை அப்துல் அஜிஸ் தெரிவித்திருந்தால் இசி தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருக்க மாட்டார். ஏனெனில் இசி பாகுபாடு காட்டாமல் இருப்பதோடு பொது மக்களுடைய நம்பிக்கையையும் பெற்றிருக்க வேண்டும் என அகோங் விரும்பியிருப்பார் என்றும் மாட் ஜைன் சொன்னார்.
வான் அகமட்டைப் பொறுத்த வரையில் அப்துல் அஜிஸ் அந்தக் குற்றத்தைப் புரிவதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டாலம் என்றும் அவர் குறிப்பிட்டார். காரணம் வான் அகமட் 1998ம் ஆண்டு முதல் இசி-யில் பணியாற்றி வருகிறார். நியமனங்கள் தொடர்பாக அதுவும் முக்கியமான பதவிகள் சம்பந்தப்பட்ட இசி விதிமுறைகள் வான் அகமட்டுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
“இது சாலையில் நடந்து செல்லும் சாதாரண மனிதரை ஏமாற்றிய விஷயமல்ல. ஆட்சியாளர் மாநாட்டையும் அகோங்கையும் ஏமாற்றியது சம்பந்தப்பட்டதாகும். அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளில் இனிமேல் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது. உடனடியாக விசாரணைகள் தொடங்க வேண்டும்,” என மாட் ஜைன் வலியுறுத்தினார்.
“முன்னாள் தேசியத் தலைமை நீதிபதி சாலே அபாஸ், அப்போதைய அகோங்கிற்கு தனிப்பட்ட கடிதத்தை எழுதியதற்காக பஞ்சாயத்து மன்றத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டதை மக்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். அது தவறான நடத்தையாக கருதப்பட்டு சாலே பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.”
அகோங்கையும் ஆட்சியாளர் மாநாட்டையும் ஒரே நேரத்தில் ஏமாற்றியதுடன் ஒப்பிடுகையில் அகோங்கிற்கு கடிதம் எழுதியதை என்னவென்று சொல்வது ?” என அவர் வினவினார்.
பஞ்சாயத்து மன்றத்தை அமைக்குமாறு பிரதமர் யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு ஆலோசனை கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட மாட் ஜைன், அகோங்கையும் ஆட்சியாளர் மாநாட்டையும் ஏமாற்றியது கடுமையான விஷயம் எனக் கருதினால் நஜிப் தாம் விடுமுறையில் செல்வதற்கு முன்னர் அதனைச் செய்ய வேண்டும் என்றார்.