அறிக்கையை மீட்டுக் கொள்ளுமாறு மாட் சாபுவை பெர்க்காசா கேட்டுக் கொண்டுள்ளது

பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு, கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளைப் பாராட்டியும் பாதுகாப்புப் படைகளை சிறுமைப்படுத்தியும்   வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையை அவர் மீட்டுக் கொள்ள வேண்டும் என பெர்க்காசா இன்று கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு அதன் தலைவர் இப்ராஹிம் அலி, இன்று கோலத் திரங்கானுவில் பெர்க்காசா திரங்கானுவின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் கேட்டுக் கொண்டார்.

மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் சாபு ஆகஸ்ட் 21ம் தேதி பினாங்கு தாசெக் குளுகோரில் ஆற்றிய உரை குழப்பத்தைத் தருகிறது என்றும் நாட்டு வரலாற்றை மாற்றும் முயற்சியாக அமைந்துள்ளது என்றும் இப்ராஹிம் சொன்னார்.

“முகமட் சாபு தமது உரையை மீட்டுக் கொள்வது மீது அச்சப்படவோ வெட்கப்படவோ வேண்டியதில்லை. ஏனெனில் தலைவர் என்னும் முறையில் அது அவரது தோற்றத்தைப் பாதிக்காது,” என்றார் அவர்.

1950ம் ஆண்டு புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தைத் தாக்கி 25 போலீஸ்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொன்ற கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளை முகமட் சாபு தமது  உரையில் புகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஒன் ஜாபார், துங்கு அப்துல் ரஹ்மான் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுடைய போராட்டத்தையும் முகமட் சாபு சிறுமைப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.