எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 20 இல் மலேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் காலிட் அபு பாக்காரின் வீட்டின் முன் தோசைக் கடை போடுவதற்கு 20 இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் அங்காத்தான் வர்ஹா அமான் மலேசியா (வர்ஹாஅமான்) திட்டமிட்டுள்ளது.
இந்த தோசைக் கடை காலை மணி 10.00 க்கு தொடங்கும். இக்கடையின் முகவரி 2/7G, தாமான் புக்கிட் தெராதை, அம்பாங் (Jalan 2/7G, Taman Bukit Teratai, Ampang). காலை உணவாக வழங்கப்படவிருக்கும் தோசை முற்றிலும் இலவசமாகும் என்று வர்ஹாஅமானின் தலைமைச் செயலாளர் எஸ். பாரதிதாசன் இன்று மாலை விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.
அது வேறு, இது வேறு
கடந்த வாரம் சில வணிகர்கள் பெர்சே 3.0 இன் இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின் முன் போட்டிருந்த பர்ஹர் கடைக்கும் தோசை நிகழ்ச்சிக்கும் எந்த “தொடர்பும்” இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் சில வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அம்பிகாவின் வீட்டின் முன் பர்ஹர் கடையைத் திறந்து 200 பர்ஹர்களை விநியோகித்தனர்.
ஏப்ரல் 28 இல் பெர்சே 3.0 நடத்திய குந்தியிருப்பு எதிர்ப்பின் விளைவாக தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறி அவர்களின் அமைப்பான இக்லாஸ் கடந்த ஒரு போராட்டத்தை நடத்தியது. பெர்சே நடத்திய பேரணியின் விளைவாக தங்களுக்கு ரிம200,000 வரையில் நட்டம் ஏற்பட்டதாக அந்த அமைப்பு கூறிக்கொண்டது.
பின்னர், அம்பிகாவின் வீட்டின் முன் பர்ஹர் கடை போட்டவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த போலீஸ் படை துணை ஐஜிபி காலிட், வீட்டு உடமையாளருக்கு தொந்தரவு ஏதும் ஏற்படுத்தாத வரையில் ஒருவரின் வீட்டின் முன் அமர்ந்திருப்பதில் தவறு ஏதும் இல்லை என்று கூறினார்.
ஆர்ப்பாட்டமல்ல, புரமோசன்!
துணை ஐஜிபியின் அறிக்கைக்கு மதிப்பளித்து அவரின் வீட்டு முன் நடைபெற விருக்கும் தோசை நிகழ்ச்சி ஓர் ஆர்பாட்டமாக இருக்காது. அது ஒரு தோசை அறிமுக நிகழ்வாக இருக்கும் என்று பாரதிதாசன் கூறுகிறார்.
நாங்கள் தோசையை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். மலேசியர்கள் மறந்துவிட்டதுபோல் தோன்றும் அது மலேசிய பாரம்பரிய இலாகாவால் பாரம்பரிய உணவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அந்த நிகழ்ச்சி ஒரு விழிப்புணர்வு பரப்புரையாக இருக்கும். அந்நிகழ்வு ஆர்ப்பாட்டத்தைவிட அந்த உணவின் அறிமுகமாகவே இருக்கும் என்றாரவர்.
இலவச தோசை மட்டுமல்ல. எப்படி சுவையான தோசை செய்வது என்பதும் அங்கு வருபவர்களுக்கு கற்றுத்தரப்படும். அதற்கும் கட்டணமில்லை. இந்நிகழ்ச்சியில் மலேசிய சுற்றுப்பயண இலாகாவும் சேர்ந்து கொண்டால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்றார் பாரதிதாசன்.
பாதுகாப்பான இடம்
“காலிட் என்ன கூறினாரோ அதற்கேற்ப நாங்கள் அவருடைய வீட்டை தேர்வு செய்தோம். இது அவர் அளித்த வாக்குறுதியாகும். மேலும், அவர் நாட்டின் இரண்டாவது பெரிய போலீஸ்காரர். அவரது வீட்டின் வெளிப்புறம் பாதுகாப்பானதாக இருக்கும்”, என்றாரவர்.