புதிய ஊடகங்களைக் கட்டுப்படுத்த இணையப் போர் (cyber warfare) தொடங்கக் கூடும்

அரசாங்கம் அடுத்து வரும் ஆண்டுகளில் இணையத்தையும் புதிய ஊடகங்களையும் கட்டுப்படுத்த “தீவிரமான நடவடிக்கைகளில்” இறங்கும் என ஊடக சுதந்திரத்தைக் கண்காணிக்கும் CIJ என்னும் சுயேச்சை இதழிலியல் மய்யம் கூறுகிறது.

“சுதந்தரமாக இயங்கு சுயேச்சை இணைய ஊடகங்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விரிவான கட்டுப்பாட்டை பெற அரசாங்கம் முயலுவது தெளிவாகத் தெரிகிறது,” என 2011ம் ஆண்டுக்கான பேச்சுச் சுதந்திர அறிக்கையில் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்த முயற்சி, செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அச்சுக்கூட, வெளியீடுகள் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் போன்றவற்றுக்கு ஏற்ப இருப்பதாகவும் அது கூறியது.

ஊடகச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் பிஎன் மதிக்கிறது, நிலை நிறுத்துகிறது எனக் கருதுவதற்கு எந்த ஆதாரத்தையும் தான் காணவில்லை எனக் குறிப்பிட்ட CIJ அதற்கு மாறாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளே அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.

இணையத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற பிரச்னைகளை சமாளிப்பதற்கு “இணையப் போர் பிரிவு” ஒன்றை அமைப்பது பற்றி பிஎன் தலைவர்கள் பேசி வருவதை அது சுட்டிக் காட்டியது.

அதற்கு பின்னர் அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் மேலும் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

DDOS தாக்குதல்கள்

DDOS என்ற விநியோகச் சேவை மறுப்பு தாக்குதல்களை அடையாளம் தெரியாதவர்கள் மேற்கொள்வது குறித்தும் CIJ கவலை தெரிவித்தது.

அந்தத் தாக்குதல்களின் போது மலேசியாகினி, சரவாக் ரிப்போர்ட் போன்ற மாற்று செய்தி இணையத் தளங்களை திறப்பதற்கான வழிகள் முடக்கப்பட்டன. எதிர்காலத்தில் நடத்தப்படக் கூடிய இணையப் போருக்கு அந்த நடவடிக்கைகள் ஆரூடம் கூறுவதாகத் தெரிகிறது.

அந்த அமைப்பு, முன்மொழியப்பட்டுள்ள கணினி தொழில் நிபுணர் மசோதா பற்றியும் கவலை தெரிவித்தது. கணினி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் அரசாங்கம் நியமிக்கும் வாரியம் ஒன்றில் பதிந்து கொள்ள வேண்டும் என்பதை அந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

அந்த நடவடிக்கை கணினி நிபுணர்களை அரசாங்கத்தின் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வழி என்றே கருதப்பட வேண்டும்.

“அந்த நடவடிக்கைகள் காரணமாகவும் 2012ல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாலும் இனையத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்து வரும் ஆண்டுகளில் தீவிரமடையும்,” என CIJ எச்சரித்தது.