இண்ட்ராபின் பிரிட்டிஷ் வழக்குரைஞர் நாடு கடத்தப்பட்டார்

மலேசியாவில் இந்திய-மலேசியர்கள் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படுவது சரியா என்பதைக் கண்டறிய வந்த பிரிட்டிஷ் வழக்குரைஞர் இம்ரான் கானைக் குடிநுழைவுத்துறை நாட்டை விட்டு வெளியேற்றியது.

இரண்டாவது தடவையாக வெளிநாட்டு வழக்குரைஞர் ஒருவர் இவ்வாறு நாடு கடத்தப்படுகிறார். கடந்த மாதம், ஸ்கோர்பியன் நீர்மூழ்கி ஊழல் வழக்கில் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரெஞ்ச் வழக்குரைஞர் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அங்கேயே தடுக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

இனவாதத்துக்கு எதிராக வழக்காடுவதில் பேர்பெற்றவரான இம்ரான், குடிநுழைவுத்துறையால் 12 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு லண்டன் செல்லும் விமானம் ஒன்றில் திருப்பி அனுப்பப்பட்டார்.
“இம்ரான் நேற்று பிற்பகல் மணி 1.50க்கு கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் வ்ந்து சேர்ந்தார். வந்ததும் குடிநுழைவுத்துறை முகப்புக்குச் சென்ற அவர், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான வழக்கில் தம்மை வழக்குரைஞராக அமர்த்திக்கொண்டிருக்கும் தம் கட்சிக்காரர்களைச் சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவித்துக்கொண்டார்”, என்று இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“அதிகாரி ஒரு பட்டியலைச் சரிபார்த்துவிட்டு இம்ரானிடம் அவர் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறினார்.”

இம்ரான்  நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்குத் தகுந்த காரணத்தைக் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் கொடுக்க முடியவில்லை என்று வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

“இம்ரானுக்கு அனுமதி கொடுப்பதில் தமக்கு மறுப்பு இல்லை என்றும் ஆனால் தடுக்கச் சொல்லி புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவின் உயர்மட்டத்திலிருந்தும் உள்துறை அமைச்சிடமிருந்தும் தமக்கு உத்தரவு வந்திருப்பதாகவும் குடிநுழைவு உயர் அதிகாரி கூறினார். இம்ரான், மலேசியாவின் பாதுகாப்புக்கு ஒரு மிரட்டல் எனப் போலீஸ் கருதுவதாகவும் அவர் சொன்னார்”.

என்றாலும், அந்த வழக்கில் இன்னொரு வழக்குரைஞரான சுரேஷ் குரோவர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்.

அவ்விருவரின் வருகை, மலாயாவுக்கு இந்தியர்களைத் தொழிலாளர்களாகக் கொண்டுவந்த பிரிட்டிஷ் அரசாங்கம் பின்னர் அவர்களை நிர்க்கதியாக விட்டுச் சென்றதாகக் கூறி  தொடரப்படும் வழக்குக்கு ஆதாரங்கள் திரட்டும் நோக்கம் கொண்டதாகும்.

“வழக்குரைஞர்கள் ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களை நேரில் சந்தித்து அவர்கள்  அடையாளக் கார்ட், கல்வி  போன்றவற்றைப் பெறுவதில் எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றித் தகவல்களைத் திரட்டுவார்கள்”, என்று மனித உரிமைக் கட்சி(எச்ஆர்பி) தகவல் பிரிவுத் தலைவர் எஸ்.ஜெயதாஸ் மலேசியாகினியிடம் கூறினார்.

அச்சந்திப்பு இம்ரான் இல்லாமலேயே, நாளைக் காலை மணி 9-க்கு கிள்ளான் ஹொக்கியான் மண்டபத்தில் நடைபெறும். மூடிய-கதவுக் கூட்டமாக இருக்கும்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வழக்கு 2007-இலேயே தொடரப்பட்டது. ஆனால் கோலாலம்பூரில் இண்ட்ராப் பேரணியை அடுத்து அதன் தலைவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதால் அது நின்றுபோனது.

முதல் வழக்கைப் பதிவு செய்த இண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி இன்னமும் பிரிட்டனில் நாடுகடந்து வாழ்கிறார். அங்கிருந்தபடியே அவர் இவ்வழக்கை முன்னின்று நடத்துவார்.

நேற்று இம்ரான்  விவகாரத்தில் தலையிட பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகமும் கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரமும் முயன்றதாகவும் வேதமூர்த்தி கூறினார்.

“மலேசிய அதிகாரிகள் தொலைபேசியை எடுக்கவில்லை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது”, என்றவர் வருத்தப்பட்டுக்கொண்டார்.

“பிரிட்டிஷ் குடிமகனான இம்ரான் கானிடம் மலேசிய அரசாங்கம் இவ்வாறு நடந்துகொண்டது  பன்னாட்டு உறவுகளின் நெறிமுறைகளை மீறிய செயலாகும் என்பதுடன் அது பிரிட்டிஷ் அரசாங்கத்தை அவமதிக்கும் செயலுமாகும்”, என்று வேதமூர்த்தி குறிப்பிட்டார்.