கேவியஸ்:ஊராட்சி அதிகாரிகள் மாற வேண்டும்

பிபிபி தலைவர் எம்.கேவியஸ், அரசாங்கத்தின் அடுத்த உருமாற்ற அலை, ஊராட்சி மன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.

துணிச்சலாக கருத்துரைக்கும் அரசியல்வாதி என்று பெயர்பெற்றிருக்கும் அவர், ஊராட்சி மன்றங்கள் திறமைக்குறைவாக செயல்படுவதும் அதன் ஊழியர்களில் ஊழல்வாதிகளாக இருப்போரின் அத்துமீறிய செயல்களாலும் அரசாங்கத்தின் பெயர் கெட்டுப்போகிறது என்றார்.

2008-இல், கூட்டரசு பிரதேசமான கோலாலம்பூரில் பிஎன் 10 இடங்களை இழந்ததற்கு, ஊராட்சி அதிகாரிகள் தங்களைச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக நினைத்துக்கொண்டு அதிகார தோரணையில் நடந்துகொண்டதுதான் காரணம் என்று கேவியஸ் பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார்.

“அதிகார அத்துமீறல்களையும் ஊராட்சி அதிகாரிகள் தங்களிடம் மோசமாக நடந்துகொள்வதையும் பார்ப்பவர்கள் அதைத் தடுக்க முடியாத அளவுக்கு பிஎன் பலவீனமடைந்திருப்பதாக நினைக்கிறார்கள்.இந்நிலையைத் திருத்த ஏதாவது செய்தாக வேண்டும்.வெளிப்படையாக பேசுகிறேன் என்பது தெரிகிறது.ஆனால், உண்மையைத்தான் பேசுகிறேன்.என்ன பேசுகிறோம் என்பதை அறிந்தே பேசுகிறேன்.வேண்டுமானால் என்மீது வழக்கு தொடுக்கட்டும்”, என்றார்.30 ஆண்டுகளுக்குமுன் கம்போங் பாண்டானில் குடிசைப்பகுதியில் வாழ்ந்தபோது அமலாக்க அதிகாரிகள் மட்டுமீறிய அதிகாரத்துடன் நடந்துகொண்டதை எல்லாம் இன்னும் மறந்துவிடவில்லை அவர்.

இடைநிலைக் கல்வியை முடித்ததும்,அப்போதைய பிரதமர் அப்துல் ரசாக் உசேன் மக்கள் காய்கறி பயிர்செய்வதை ஊக்குவிப்பதற்காகக் கொண்டுவந்த பச்சைப் புத்தகத் திட்டத்தில் பங்கேற்க விரும்பியதை அவர் நினைவுகூர்ந்தார்.

அதற்காக தம் வீட்டுக்கு எதிரில் ஒரு சிறு கொட்டகை அமைத்தார்.ஆனால், அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்றுகூறி அமலாக்க அதிகாரிகள் அதை உடைத்தெறிந்தனர்.

“அரசாங்கம் ஊக்குவிக்கும் ஒன்றை நீங்கள் செய்ய விரும்பும்போது அரசாங்கத்தில் உள்ள சிலர் வந்து நீங்கள் உருவாக்கியதை உடைத்தெறிந்தால் எப்படி இருக்கும்?அரசின்மீதுதான் உங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்”, என்றார் கேவியஸ்.அச்சம்பவத்துக்குப் பின்னர் அவர் லண்டன் சென்று வழக்குரைஞரானார்.

அன்றிலிருந்து இன்றுவரை எதுவும் மாறவில்லை என்று கூறிய கேவியஸ், ஊராட்சி அதிகாரிகள் இன்னமும் மக்கள் மீது  அதிகாரம் செலுத்துவது குறையவில்லை.குறைந்தவிலை வீடுகள் கட்டுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்காகவும் விண்ணப்பம் செய்யும்போது அனுமதி கொடுப்பது இழுத்தடிக்கப்படுகிறது.

“மக்கள் ஒரு அமைப்புமுறையால் நன்மை பெற முடியாதபோது வெறுப்படைந்து விடுகிறார்கள்.இதற்கு பிஎன்தான் காரணமென்று அதைத் தண்டித்து விடுகிறார்கள்”. ஊராட்சி நிர்வாகத்தின் உள்ளும் புறமும் அறிந்தே பேசினார் கேவியஸ். ஒரு நேரம் வீடமைப்பு, ஊராட்சித் துணை அமைச்சராக இருந்தவராயிற்றே.

ஊராட்சி நிர்வாகம் “கமுக்கமான ஒரு சேவைத்துறை” என்றும் அதில் தப்புசெய்தவர்கள் விலக்கப்படுவதில்லை, ஊராட்சி நிர்வாகத்தின்கீழ் உள்ள மற்ற துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஊராட்சி நிர்வாகங்களினால் அரசாங்கம் பாதிக்கப்படாதிருக்க இப்படிப்பட்ட குறைபாடுகளுக்கு நஜிப் தீர்வுகாண வேண்டும் என்று விரும்புகிறார் கேவியஸ்.

காலம் மாறிவிட்டது என்று குறிப்பிட்ட கேவியஸ், 2020 தொலைநோக்குத் திட்டத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஊராட்சி நிர்வாகங்கள் உருமாற வேண்டும் என்றார்.அவை மக்களுக்கு வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டுமே தவிர அவர்கள் வெறுப்புக்கொள்ளுமாறு நடந்துகொள்ளக்கூடாது.