பினாங்கு பிஎன் தலைவரும் சிஎம்மும் கெராக்கானைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்

2008 பொதுத் தேர்தலில் பினாங்கில் கெராக்கானும் மசீச-வும் மிக மோசமாக தோல்வி அடைந்ததை அடுத்து மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி அம்னோவைச் சேர்ந்தவரே அங்கு பிஎன் தலைவராக இருத்தல் வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட இடங்களில் பிஎன் பங்காளிக்கட்சிகளில் கெராக்கான்,மசீச, மஇகா ஆகியவை ஓர் இடத்திலும் வெற்றிபெறவில்லை என்பதாலும் அம்னோ போட்டியிட்ட 15 இடங்களில் 11-ஐ வென்றது என்பதாலும் அவர் இப்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், இப்போதைய அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், அது கட்சித் தலைவர் ஒருவரின் கருத்து மட்டுமே என்கிறார்.

நிபோங் தெபால் முன்னாள் எம்பி-ஆன சைனல், பிஎன் கூட்டணி பினாங்கை மீண்டும் கைப்பற்ற வேண்டுமானால் வலுவுடன் இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தவே அம்னோ அப்படி ஒரு கருத்தை முன்வைத்தது என்றார்.

“நம்பிக்கை இல்லையென்றால் போராடுவதில் பயனில்லை.தலைமையேற்கும் துணிச்சல் கெராக்கானுக்கு இல்லையென்றால் தலைமையேற்க அம்னோ தயார் என்பதை உணர்த்ததான் அப்படிச் சொன்னோம்.”

புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றியுள்ள சைனல், கெராக்கனுக்கு அது ஆற்ற வேண்டிய பணியை நினைவுறுத்தவே அஹ்மட் ஜஹிட் அவ்வாறு கூறினார் என்றார்.

பினாங்கில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் எல்லாரும் அம்னோவைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் முதலமைச்சர் பதவி இனி அம்னோவுக்குத்தானா என்று வினவியதற்கு “நிலைமையில் எந்த மாற்றமுமில்லை”, என்றும் அந்தப் பதவி கெராக்கானுக்குத்தான் என்ற பிஎன் முடிவு மாறாது என்றும் அவர் சொன்னார். 

“1974-இல் பிஎன் உருவானபோது பங்காளிக்கட்சிகளுக்கிடையில் அப்படி ஒரு புரிதல் ஏற்பட்டு விட்டது”, என்றார்.

“பினாங்கு பிஎன் தலைவர் பதவி கெராக்கானுக்குத்தான் என்று அப்போது முடிவு  செய்யப்பட்டது. அம்முடிவைத் தொடர்ந்து மதிப்போம்.

“நாங்கள் எத்தனை இடங்களை வென்றாலும் பினாங்கு பிஎன் தலைவராக அம்னோ-அல்லாத ஒருவர்தான் இருப்பார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.” 

பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இப்படியொரு புரிதல் இருப்பதால்தான் பிஎன்னால் இத்தனை ஆண்டுகளாக நிலைத்து நிற்க முடிகிறது என்றாரவர்.