பொதுத்தேர்தல் ஜூலையில், குவான் எங் கூறுகிறார்

ஜூலை மாதத்தில் அடுத்த 13 ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறுகிறார். அதற்கான இரு அறிகுறிகளை அவர் குறிப்பிட்டார்.

“முதலாவது, அனைத்து மாநில தொகுதிகளிலும் பிஎன் நடவடிக்கை அறைகளைத் திறந்துள்ளது. இதற்குமுன் அவை திறக்கப்படவில்லை; இப்போது திறக்கப்பட்டுள்ளது”, என்று கோம்தாரில் 1,000 பேருக்குமேல் கலந்து கொண்ட டிஎபி பொதுத்தேர்தல் கூடுதலில் அவர் இன்று கூறினார்.

இரண்டாவது, பிஎன் அவசரத்தில் இருப்பதாகத் தெரிகிறது. “எவ்வளவுக்கு தள்ளிப்போடுகிறார்களோ அவ்வளவுக்கு மோசமான விளைவுகளை அது அவர்களுக்குக் கொணரும்”, என்றாரவர்.

எதிர்தரப்பினர் அளவுக்கு மீறிய நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்று கூறிய குவான் எங், மலாயா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலம் பிஎன் பக்கம் சாயும் என்று கூறியிருப்பதை சுட்டிக் காட்டினார்.

“நாம் வெல்வோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நமது எதிர்ப்பாளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்”, என்று குவான் எங் எச்சரிக்கை விடுத்தார்.

“நாம் வெற்றி பெற போராட வேண்டும்”, என்று டிஎபி தலைமைச் செயலாளரான அவர் வலியுறுத்தினார்.