அனுமதி இல்லை என்கிறது டிபிகேஎல்; கடை போடுவோம் என்கிறார்கள் வியாபாரிகள்

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வீட்டின் முன்புறம் கடை போட 60 சிறுவியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மறுத்துவிட்டது.

ஆனால், கோலாலம்பூர் சிறுவியாபாரிகள் செயல் மன்றத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், அம்பிகாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கை திட்டப்படி நடக்கும் என்றார்.

கோலாலம்பூர் மேயர் அஹ்மாட் புவாட், வியாபாரிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க “முறையான வழிமுறைகளை”ப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நீங்கள் சொல்வதுபோல் நடந்தால், அதற்கு ஒரு முடிவு இருக்காது.அவரது(அம்பிகா)வீட்டுக்குமுன் அமைதியாக ஒன்றுகூடுங்கள்,அது பரவாயில்லை…”என்று புவாட், டிபிகேஎல்-இடம் அனுமதிகேட்டு வந்த ஜமாலைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஆனால், கடைகள் அமைக்க சட்டப்படி டிபிகேஎல் அனுமதிக்காது.

“ஏனென்றால், அம்பிகாவின் வீடு மட்டும் அங்கில்லை.அதனால்,அவர்களது திட்டத்தைத் தொடர நினைத்தால் அதற்கு வேறு ஒரு பொருத்தமான இடத்தைப் பார்ப்பது நல்லது”, என்றார்.

வியாபாரிகள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய சட்டப்பூர்வமான வழிகளை நாட வேண்டும் என்றவர் அறிவுறுத்தினார்.

கடைகள் போடுவதற்கான இடங்களை அடையாளம் காட்ட வியாபாரிகள் மஞ்சள் நிறக் கோடு போட்டு வைத்திருக்கிறார்கள்.அவற்றின்மீது மாநகராட்சி அதிகாரிகள் கறுப்புச்சாயம் பூசி அழிப்பார்கள் என புவாட் கூறினார்.

“கடைகள் போடும் இடங்களுக்குச் சாயம் பூச அனுமதிக்கப்படாது.அவர்கள் சாயம் பூசி வைத்திருப்பதால் அதன்மீது கறுப்புச் சாயம் பூசி மறைப்போம்.மீறி அவர்கள் கடை போடுவார்களானால் அமலாக்கப் பிரிவினரை அனுப்புவோம்.சட்டத்தை மதிக்க வேண்டும். போலீசின் ஒத்துழைப்பும் கோரப்படும்”, என்று அஹமாட் புவாட் கூறினார். .

ஆனால், கடைகள் போடுவதில் பிடிவாதமாக இருக்கிறார் ஜமால்.அதுதான் தங்கள் பிழைப்பு என்றாரவர்.

“டிபிகேஎல்லின் முடிவை மதிக்கிறோம்.எங்களின் பணியை நாங்கள் செய்யப் போகிறோம்.அவர்களின் பணியை அவர்கள் செய்யட்டும்.

“எங்களின் இழப்பை ஈடு செய்யும் பொறுப்பை யாராவது ஏற்கும்வரை இதை(கடை போடுவதை) நாங்கள் செய்வோம்”, என்று ஜமால் கூறினார்.

பிரதான இடம் ரிம5,000 ஏலத்துக்குப் போனது

இதனிடையே, அம்பிகாவின் வீட்டுக்குமுன் உள்ள பிரதான இடத்தை ரிம5,000 கொடுத்து ஏலத்துக்கு  எடுத்தார் அஹ்மட் டியா அலி.

மேயரைச் சந்தித்த பின்னர் மன்றம், கடைகளுக்கான இடங்களை ஏலம் விட்டது. மாநகராட்சி மன்றக் கட்டிடத்துக்கு முன்புறத்திலேயே ஏலம் விடுதல் நடைபெற்றது.

அஹ்மட் டியா, தாம் ஏலத்துக்கு எடுத்த இடத்தில் சுவைப் பானங்களும் உணவும் விற்கத் திட்டமிட்டுள்ளார். அம்பிகாவின்மீது மிகவும் அதிருப்தி கொண்டிருப்பதால் அந்த இடத்துக்கு ரிம5,000 கொடுத்தது பற்றி அவர் கவலைப்படவில்லை.

“அவரால், வியாபாரம் கெட்டுப்போனது”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“அதனால் ஏற்பட்ட அதிருப்தியை அவருடைய வீட்டின்முன் வியாபாரம் செய்து வெளிப்படுத்தப் போகிறேன்”, என்றவர் அந்த இடத்துகான பணத்தை ரொக்கமாகவே செலுத்தினார். மற்ற இடங்கள் ஒவ்வொன்றும் ரிம100-க்கு விற்கப்பட்டன.

பிற்பகல் மணி 3.30தொடங்கி இரவு 8வரை வியாபாரம் செய்யப்போகும் அந்த 60 கடைகளுக்கும் குறைந்தது 10ஆயிரம் பேராவது வருவார்கள் என ஜமால் எதிர்பார்க்கிறார்.

 

 

TAGS: