13வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் தம்மை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு நஜிப் நீதிமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்துகிறார் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளார்.
தாம் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுக்கள் எதிர்த்தரப்புத் தலைவர் என்ற முறையில் தமக்கு எதிராக ஜோடிக்கப்பட்டவை என்றும் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் மோசடிகள் சம்பந்தப்பட்ட அடிப்படைப் பிரச்னையிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி என்றும் அவர் சொன்னார்.
“நஜிப் தேர்தலில் என்னை எதிர்கொள்ள வேண்டும். நீதிமன்றங்கள் தமக்கு துணை புரிய வேண்டும் என அவர் விரும்புகிறார். தேர்தல் என்பது மக்கள் முடிவு செய்வதற்கு உள்ள விவகாரம் என நான் நஜிப்புக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.”
“நீங்கள் நீதிமன்றத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் நீங்கள் அங்கீகரித்த கோளாறான சட்டத்தைக் கொண்டு என்னைப் போன்ற அரசியல் எதிரிகளையும் மற்றவர்களையும் மிரட்டுவதற்குப் பயன்படுத்தக் கூடாது,” என அன்வார் சொன்னார்.
“உங்கள் அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும் ஒடுக்கவும் நீங்கள், கடும் எதிர்ப்புக்கு இடையில் நாடாளுமன்றம் அங்கீகரித்த கேள்விக்குரிய சட்டத்தைப் (அமைதியாக ஒன்று கூடும் சட்டம்) பயன்படுத்தக் கூடாது ,” என்றார் அன்வார்.
“அவர் மீண்டும் தமது அரசியல் விருப்பங்களுக்காக சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லை மீண்டும் பயன்படுத்தியுள்ளார். எனக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுக்களைத் தான் நீங்கள் ஜோடிக்க விரும்புகின்றீர்கள் ?”
அவர் ஏற்கனவே என்னை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் -ஊடகங்கள், நீதிமன்றங்கள் என எல்லா வழிகளையும் பயன்படுத்தி விட்டார்,” என்றார் அவர்.
இந்த வழக்கிற்காக நீதிமன்றம் வரவேண்டிய நிலைமை இருந்த போதிலும் தாம் கவலைப்படவில்லை என்றும் தமது அரசியல் பிரச்சார முயற்சிகளை அது பாதிக்காது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
அரசு தரப்பு என்னை விரைவாக கட்டுப்படுத்த விரும்புகிறது. அதனால் அது முன் கூட்டியே தேதிகளைக் கோரியுள்ளது. ஆனால் பிரதிவாதித் தரப்பு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது,” என அன்வார் குறிப்பிட்டார்.
தமக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு llஐப் போன்று மலேசியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் என அந்த பெர்மாத்தாங் எம்பி கூறினார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தாம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வதற்கு ஜுலை 2ம் தேதி தமக்கு இன்னொரு மாதத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.