ஜைட்: பெர்சே பேரணி குறித்து விசாரிக்க ஆர்சிஐதான் சிறந்த வழி

ஏப்ரல் 28 இல் நடந்த பேரணி குறித்து விசாரணை நடத்துவதற்கு அரச விசாரணை ஆணையம்தான் (ஆர்சிஐ) சிறந்த வழி என்று இன்று கூறினார்.

இதர விசாரணை குழுக்களுக்கு, முன்னாள் ஐஜிபி ஹனிப் ஒமார் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் சுயேட்சை விசாரணை குழு உட்பட, சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்று அந்த முன்னாள் சட்ட அமைச்சர் கூறினார்.

“குழுவின் தலைவர் யார் என்பது ஒரு பொருட்டல்ல, சாட்சிகளை சாட்சியம் அளிக்க கட்டாயப்படுத்துவதற்கும் அழைப்பாணை பிறப்பிப்பதற்கும் அதற்கு அதிகாரமில்லை. ஒரு பொது விசாரணை நடத்த விரும்பினால், சட்ட அதிகாரம் உடைய ஒன்றே ஒன்று ஆர்சிஐதான்”, என்று கோலாலம்பூர், ரோயல் லேக் கிளப்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பெர்சே 3.0 இல் சம்பந்தப்பட்டதற்காக பிகேஆர் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், அஸ்மின் அலி மற்றும் பாட்ருல் ஹிசாம் ஷஹாரின் ஆகியோர் மீது அரசாங்கம் குற்றம் சாட்டுவது “ஒரு நல்ல வியூகம் அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எதிரணித் தலைவர் மீது குற்றம் சாட்டுவது சரியான வியூகம் அல்ல”, என்றாரவர்.

இது “ஒரு சாதாரண குற்றம்.” இதற்காக அவர்கள் மீது “குற்றம் சாட்டப்பட்டிருக்கக் கூடாது”, என்று அவர் கருத்துரைத்தார்.

பெர்சே 3.0 இன் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் நடந்த ஆர்ப்பாட்டம் விவேகமற்றதாகும் என்று ஜைட் கூறினார்.

“மக்கள் ஒன்றுகூடலாம். ஆனால் அவர்கள் சரியான காரணத்திற்காக ஒன்றுகூட வேண்டும். அம்பிகா ஆபத்தானவர் அல்லர்.ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது நல்லதல்ல”, என்றாரவர்.