தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரும் பேரணி ஒன்றில் பங்கு கொண்டதற்காக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னர் அந்த வழக்கில் ‘உரிய நடைமுறைகள்’ பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்கா மலேசியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
“உரிய நடைமுறைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நாங்கள் மலேசிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதுடன் எந்த ஒரு வழக்கு விசாரணையும் நியாயமான, வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம்,” என அமெரிக்க வெளியுறவுத் துறைப் பேச்சாளர் விக்டோரியா நுலாண்ட் கூறினார்.
“நாங்கள் அந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருவோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தையும் தலைநகர் கோலாலம்பூர் மத்தியில் ஏப்ரல் 28ம் தேதி பேரணி நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் மீறியதாக அன்வார் மீதும் அவரது கட்சியைச் சார்ந்த இரண்டு சகாக்கள் மீதும் நேற்றுக் குற்றம் சாட்டப்பட்டது.
அன்வாருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீதான வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின்னர் அந்தப் புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அந்த குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை அரசியல் மருட்டல் என்னும் முறையில் தம்மை அகற்றுவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கம் ஜோடித்தத்தாக அன்வார் ஏற்கனவே கூறியுள்ளார்.
உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட மாட்டாது என்றும் விசாரணை நியாயமாக இருக்காது என்றும் வாஷிங்டன் கவலை கொள்கிறதா என கேட்கப்பட்ட போது ” நாங்கள் கடந்த காலத்தில் கவலைப்பட்டது உண்மையே,” என நூலாண்ட் பதில் அளித்தார்.
-ஏஎப்பி