அம்பிகாவுக்கு எதிரான கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை போலீஸ் உடனடியாகத் தடுக்க வேண்டும்

பெர்சே இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாமல் இருந்துவரும் போலீசாரின் போக்கை கண்டித்த வர்ஹாஅமான் என்ற இந்திய அரசு சாரா அமைப்பு அம்பிகாவுக்கு தொல்லைகள்  கொடுத்து அவரை அச்சுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று நடந்த அதன் செய்தியாளர் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மே மாதம் 10 ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரையில் அம்பிகாவின் வீட்டின்முன்னும் மலாக்காவிலும் அவருக்கு எதிராக கோலாலம்பூர் சிறுகடைக்காரர்கள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் அம்பிகாவை அச்சுறுத்தும் கிரிமினல் செயல்களாகும் என்று வர்ஹாஅமான் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

மலாக்காவில் நடந்த ஆர்ப்பாட்டம் அம்பிகாவை குறிவைத்து நடத்தப்பட்டதுதான். இத்தனை சம்பவங்களும் நடந்தும் அந்த கிரிமினல் செயல்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அச்செயல்களை போலீசார் அனுமதிப்பதற்கு ஒப்பாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அவரது இனம் காரணமாக அம்பிகாவை இலக்காக வைத்து இந்த கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தாங்கள் கருதுவதாக வஹாஅமான் கூறுகிறது.

அம்பிகாவுக்கு எதிராக இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளவர்களின் நோக்கம் இன வெறுப்புணர்வை மலேசியர்களிடையே தூண்டிவிட்டு நாட்டில் நிலவும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீரழிப்பதாகும் என்று வர்ஹாஅமான் அறிக்கை மேலும் கூறுகிறது.

“போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று வர்ஹாஅமான் கேட்டுக்கொண்டது.

சரியான நேரத்தில் சரியான பாடம்

நேற்று மாலை மணி 5.00 அளவில் சுமார் 50 க்கு மேற்பட்டோர் கிள்ளான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் கூடி அம்பிகா விசயத்தில் போலீசாரின் மெத்தன போக்குக்கு எதிராக போலீசில் புகார் செய்தனர்.

மொத்தம் 11 புகார்கள் செய்யப்பட்டதாக சிலாங்கூர் நடவடிக்கை குழுவின் தலைவர் எல். சேகரன் கூறினார்.

பெர்சே இணைத் தலைவர் அம்பிகாவை இலக்காகக் கொண்டு அவரின் வீட்டின் முன்புறத்தில் சிறுகடைக்காரர்கள் என்ற பெயரில் அடாவடித்தனம் செய்கிறது ஒரு கூட்டம், தொடர்ந்து செய்வோம் என்று சூளுரைக்கும் அக்கூட்டம் இனவாத அடிப்படையில் செயல்படுகிறது என்பதை இந்நாட்டு மக்களுக்கும் ஏன், உலகத்திற்கும் தெள்ளத்தெளிவாக தெரிகையில் போலீசாருக்கு மட்டும் எதுவும் தெரியாமல் இருப்பதோடு அவ்வாறு செய்வது குற்றமல்ல என்று கூறும் துணிவும் இருப்பதை அமைதியை விரும்பும் இந்நாட்டு மக்கள் அமைதியாகக் கண்டிக்கின்றனர் என்று சேகரன் மேலும் கூறினார்.

“ஒவ்வொருவரும் நினைத்த இடத்தில் கடை போட்டால், நாடு என்ன ஆகும்”, என்று வினவிய சேகரன், அம்பிகாவுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள், அச்சுறுத்தல்கள் பற்றி எதுவும் கூறாமல் இருக்கும் அரசாங்கத் தலைவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

TAGS: