கோலாலம்பூர் மய்யத்தில் உள்ள லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைகளை வைத்துள்ள வியாபாரிகள் குழு ஒன்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் கடைகளை அமைக்கும் கோலாலம்பூர் சிறு வணிகர் நடவடிக்கை மன்றத்தின் திட்டத்தை நிராகரித்துள்ளது.
“அது பாதகமான விளைவுகளைக் கொண்டு வரும். அது எங்களுக்குக் கெட்ட பெயரைத் தருகிறது. நாங்கள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை.”
“நாங்கள் சுயேச்சையானவர்கள். அரசியல் சார்பற்றவர்கள். வாழ்க்கையை நடத்துவதற்கு வருமானம் தேடவே நாங்கள் முயலுகிறோம். நீங்கள் அரசியல் விளையாட்டில் ஈடுபட விரும்பினால் வியாபாரம் செய்வதை நிறுத்திக் கொண்டு அரசியலில் ஈடுபடுங்கள்,” என அடையாளம் தெரிவிக்க விரும்பாத அந்த வணிகர் கூறினார்.
“துவாங்கு அப்துல் ரஹ்மான் சிறு வணிகர் மேடையைப் பயன்படுத்த வேண்டாம். வேறு பெயரைப் பயன்படுத்துங்கள்.”
அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மான் அங்காடிக் கடைக்காரர்கள் சந்தைக்கு மக்களை வர விடாமல் செய்து விடும் என்றும் அந்தக் குழு அஞ்சுகிறது.
ஜமால் முகமட் யூனுஸ் தலைமையில் இயங்கும் அந்த நடவடிக்கை மன்றம் பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது “ஏற்பட்ட இழப்புக்களை ஈடுகட்டும் பொருட்டு” அம்பிகா வீட்டுக்கு முன்னால் பல வகையான பொருட்கள், உணவுப் பொருட்கள், சுவை பானங்கள் ஆகியவற்றை இன்றும் நாளையும் விற்பதற்கு எண்ணியுள்ளது.
அங்காடிக்காரர்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை
சாலை ஒரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வரும் 300க்கும் மேற்பட்ட அங்காடிக்காரர்களில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினரைப் பிரதிநிதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மான் சிறு வணிகர் குழு, நேற்று மலேசியாகினி தொடர்பு கொண்ட போது ஜமாலுடைய திட்டத்தில் ஆர்வம் காட்டவே இல்லை.
அத்துடன் அந்த யோசனை பற்றித் தங்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் கூறிக் கொண்டனர். தங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட தோரணங்கள், துண்டுப் பிரசுரங்கள் வழியாகவே அந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
“நீங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம். பத்துக்கும் குறைவான வணிகர்கள் மட்டுமே ஜமாலை ஆதரிக்கின்றனர்,” என இன்னொரு வியாபாரி சொன்னார். ஜமாலுடன் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர் எனக் கேட்கப்பட்ட போது அவர் அவ்வறு கூறினார்.
அந்த ஜமாலுக்கு ஆடம்பரக் கார் விற்பனைத் தொழிலும் உணவு விடுதிகளும் சொந்தமாக உள்ளன. ஆனால் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் அங்காடி அனுமதி ஒன்றை வைத்திருப்பதாக ஜமால் கூறிக் கொள்கிறார்.
ஏப்ரல் 28ம் தேதி பேரணி நிகழ்ந்த போது லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள வணிகர்களில் பாதிப் பேர், ‘கலவரங்கள்’ மூண்டுள்ளதாகக் கூறி வியாபாரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு போலீஸ் அதிகாரி ஒருவர் உத்தரவிடும் வரை வழக்கம் போல வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
“கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திடமிருந்து எந்த உத்தரவும் இல்லை” எனக் கூறிய அந்த வணிகர், பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒதுங்குவதற்கு இடம் கொடுத்ததாகக் கருதி கடைகளை மூடுமாறு போலீஸ் ஆணையிட்டதாக கருதுகிறார்.