முன்னாள் புக்கிட் அமான் சிஐடி தலைவர் பவுசி ஷாரி, இஸ்லாமிய போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பாஸ் கட்சியில் சேர்ந்தார்.
மலேசியாகினி பவுசியைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தம் சொந்த மாநிலமான பேராக்கில் அவர் அந்த இஸ்லாமியக்.கட்சி உறுப்பினரானார்.
எதிர்வரும் தேர்தலில் ஒரு வேட்பாளராகும் எண்ணத்துடன் அக்கட்சியில் சேரவில்லை என்று கூறிய பவுசி,62, தம் அனுபவம் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறார்.
தாம் பாஸில் சேர்ந்தது ஒரு புயலையே கிளப்பி விட்டிருக்கிறது என்று கூறிய அவர் புயல் அடங்கிய பின்னர் அது பற்றி மேலும் கருத்துத் தெரிவிப்பதாக சொன்னார்.
“இப்போது எதுவும் சொல்லி மேலும் குழப்ப விரும்பவில்லை.சில நாள்கள் பொறுங்கள், எல்லாம் அடங்கட்டும்”, என்றார். அவர் பாஸில் சேர்ந்தது குறித்து மலேசிய முன்னாள்-போலீஸ் அதிகாரிகள் சங்கம் எதிர்மறையான கருத்துத் தெரிவித்துள்ளது.
‘அவர் ஒரு துரோகி’
சங்கத் தலைவர் ஷாபி பக்ரி, அச்செயலை “அரசாங்கத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்” என வருணித்தார்.பவுசி தம் முடிவால் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பலரின் மனத்தைப் புண்படுத்தி விட்டார் என்றாரவர்.
பவுசி, போலீலிசிலிருந்து பணி ஓய்வு பெற்று ஆறாண்டுகளுக்குப் பின்னர் பாசில் சேர்ந்துள்ளார்.
பாசில் இதுவரை சேர்ந்துள்ள போலீஸ் அதிகாரிகளில் மிக உயர்ந்த பதவி வகித்தவர் பவுசிதான். அவர் அக்கட்சியில் சேர்ந்தது அம்னோ-ஆதிக்கம் மிக்க பொதுச் சேவையில் பாஸின் செல்வாக்கு உயர உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அந்த இஸ்லாமியக் கட்சி இன்னொரு உயர் அதிகாரியையும்-வணிகக் குற்றப்புலன் ஆய்வுத் துறை முன்னாள் தலைவர் ரம்பி யூசுப்- தம் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது.
ரம்லி, போலீஸ் படையில் நிகழ்ந்த ஊழல்களை எடுத்துக்கூறி குறைகூறி வருபவர்.அவர், அதில் சேர்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
மற்றுமொரு போலீஸ் உயர் அதிகாரி முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராகிம்.அதிகார அத்துமீறல்கள் பற்றிக் குறைகூறி அடிக்கடி அறிக்கைகள் விடுத்து வருகிறார்.ஆனால், அவருக்கு அரசியல் கட்சியில் சேரும் விருப்பமெல்லாம் இல்லை.அதை முன்பே தெரிவித்திருக்கிறார்.