அன்வார் செராமாவில் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன

 பக்காத்தான் ராக்யாட் செராமா ஒன்றில் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. அதனால் மூத்த குடி மகன் ஒருவர் தலையில் காயமடைந்தார்.

ஒரளவு சுய நினைவில் இருந்த அந்த மனிதர் தலையிலிருந்து ரத்தம் கசியும் நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

நேற்றிரவு கோலாலம்பூரில் பிகேஆர் வசம் இருக்கும் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்திருக்கும் பந்தாய் பெர்மாய் அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பேசிக் கொண்டிருந்த போது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அருகில் உள்ள பந்தாய் டாலாம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற குடியிருப்புப் பகுதியில் அம்னோ நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்து அந்தக் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டதாக கருதப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

அந்த செராமாவுக்கான மின் விநியோகம் ‘வேண்டுமென்றே துண்டிக்கப்பட்ட’ பின்னர் 30 நிமிடங்களில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மின் விநியோகம் ஒரு கத்தியையும் நாடாக்களையும் கொண்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.

இடையூறு ஏற்பட்ட போதிலும் கூட்டத்தினர் அமைதியாக இருந்ததால் செராமா தொடர்ந்தது. அன்வாரும் தமது பேச்சை முடித்துக் கொண்டார்.

அந்தச் சம்பவத்தில் கைமுட்டி அளவுள்ள செங்கல் ஒன்றினால் 12 வயது நுருல் பால்கிஸும் கையில் காயமடைந்தார்.

அந்தச் சிறுமியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் கூடுதல் மருத்துவச் சோதனைக்குக் கொண்டு செல்லுமாறு அந்தச் சிறுமியை சோதித்த மருத்துவர் கூறியதாக சிறுமியின் தாயார் அடித்தா கெத்தெக் கூறினார்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிகேஆர் ஆதரவாளர் குழு ஒன்று 200 அம்னோ ஆதரவாளர்களை நோக்கி ஊர்வலமாகச் சென்றது. அந்த வேளையில் போலீசார் தலையிடுவதற்கு விரைந்தனர்.

இரண்டு போட்டிக் குழுக்களையும் சுவர் ஒன்று பிரித்த வேளையில் பிகேஆர் ஆதரவாளர்கள் மீது தொடர்ந்து கற்களும் தண்ணீர் போத்தல்களும் வீசப்பட்டன.

அதற்கு முன்னதாக இரவு 9 மணி வாக்கில் சிவப்பு நிறச் சட்டை அணிந்திருந்த 80 பேர் பிகேஆர் செராமா நடக்கும் இடத்தில் கூடி “Tibai (உதைக்கவும்)” என்று கூச்சலிட்டனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்வார் எதிர்ப்புக் குழுவுக்கான சொல் அதுவாகும்.

பக்காத்தான் செராமா ஒன்றின் மீது கற்களும் முட்டைகளும் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வீசப்பட்டுள்ளன. அண்மைய சம்பவம் மலாக்கா, மெர்லிமாவில் சனிக்கிழமை நிகழ்ந்தது.

லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் பேசித் தொடங்கிய போதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அப்போது அவரை நோக்கியும் பிரமுகர்கள் அமர்ந்திருந்த மேடையை நோக்கியும் டிபிகேஎல் ஊழியர் குடியிருப்புப் பகுதியிலிருந்து பச்சை நிற லேசர் ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்பட்டன.

மின் விநியோகம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதும் நுருல் தமது உரையைத் தொடர்ந்தார். ஆனால் அவர் சற்று தடுமாறியதும் மெய்க்காவலர் அவரை நோக்கி விரைந்தார்.

தமது காலடியில் ஏதோ விழுந்ததாக உணர்ந்ததாக நுருல் பின்னர் நிருபர்களிடம் கூறினார். பின்னர் அவர் தமது உரையைத் தொடர்ந்தார்.

“எனக்கு முன்பு இந்தத் தொகுதியில் எம்பி-யாக இருந்த ஷாரிஸாட் அப்துல் ஜலில் காலத்திலிருந்து நான் இங்கு பிரச்சாரம் செய்து வருகிறேன். இது மிக மோசமான சம்பவமாகும்,” என நுருல் சொன்னார்.

“என்றாலும் பிஎன் அரசாங்கத்தை அமைக்கப் போவது இதுதான் என நான் நினைக்கிறேன்,” என அவர் சொன்ன போது அங்கு கூடியிருந்த ஆயிரம் பேரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் பேசிய போது அவர் மீது லேசர் ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்பட்டன.

நள்ளிரவு 12 மணிக்கு முடிந்த அந்த நிகழ்வில் ஷா அலாம் எம்பி காலித் சமாட், பத்து எம்பி சுவா தியான் சாங் ஆகியோரும் பேசினார்கள்.

பக்காத்தான் தலைவர்கள் பேசிய வேளையில் அம்னோ பேச்சாளரான உம்மி ஹபில்டா அலி வெளியில் நின்று கொண்டிருந்தார். பக்காத்தான் தலைவர்கள் எடுத்துரைத்த பிரச்னைகளுக்கு பிகேஆர் கூட்டத்தை நோக்கி வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் வழி அவர் பதில் அளித்தார்.

தகவல் துறையின் குறியீடுகளைக் கொண்ட வேன் ஒன்றும் அம்னோ கூட்டத்தில் காணப்பட்டது. அது ஒலிபெருக்கி வசதிகளை வழங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.