செனட்டர் எஸ்ஸாம் முகம்மட் நோர், இணையச் செய்தித்தளங்களைக் கொளுத்தப்போவதாக மிரட்டல் விடுத்திருப்பது ஒரு “குற்றச் செயல்” என்றும் அவருக்கு எதிராக போலீசும் சட்டத்துறை தலைவரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“மேலவை உறுப்பினர் ஒருவர் இப்படிப் பேசியிருப்பதையும் குற்றச்செயல்களில் ஈடுபடப்போவதாக பகிரங்கமாக மிரட்டியிருப்பதையும் கண்டு மலைத்துப்போனோம்.
“அது, அவ்விரண்டு இணையச் செய்தித்தளங்களுக்கும் எதிராக அடாவடித்தனமாக விடுக்கப்பட்ட ஒரு மிரட்டல்; அதன் பணியாளர்களும் அதில் எழுதுவோரும் உடல்ரீதியாக பாதிப்புறலாம் அல்லது கொல்லப்படலாம் என்று அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள்”, என்று சுரேந்திரன் நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
கடந்த வாரம் பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றில் ஜயிஸ் மேற்கொண்ட அதிரடிச் சோதனையைத் தற்காக்க நேற்று ஷா ஆலமில், சிலாங்கூர் மாநிலப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எஸ்ஸாம் பேசியது குறித்து சுரேந்திரன் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
“மலேசியாகினிக்கும் மலேசியன் இன்சைடருக்கும் கடைசி எச்சரிக்கை. இது, கடுமையான எச்சரிக்கை. உங்கள் அபத்தத்தை நிறுத்தாவிட்டால், உங்களைத் தீயிட்டுக் கொளுத்துவோம்”, என்று எஸ்ஸாம் நேற்று எச்சரித்திருந்தார்.
“இப்படி அப்பட்டமாக மிரட்டல் விடுப்பது சட்டப்படிக் குற்றமாகும்”, என்று சுரேந்திரன் குறிப்பிட்டார்.
“குற்ற நோக்கில் அச்சுறுத்தியற்காகவும் குறும்பு செய்ததற்காகவும் எஸ்ஸாம் முகம்மட் நோருக்கு எதிராக சட்டத்துறை தலைவரும் போலீசும் குற்றவியல் சட்டத்தின் 503 மற்றும் 505ஆம் பிரிவுகளின்கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
“அடிப்படை உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதே” ஆளும் பாரிசான் நேசனலின் “அடையாள முத்திரை” ஆகிவிட்டது என்று குறிப்பிட்ட அந்த பிகேஆர் உதவித்தலைவர், மக்களுக்கு அரசமைப்பு உத்தரவாதமளிக்கும் பேச்சுரிமையை அம்னோ மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“பிஎன் அரசின் முதுகெலும்பாக உள்ள அம்னோவின் செனட்டர் ஒருவர் இணையச் செய்தி ஊடகங்களைத் தீயிட்டுக் கொளுத்தப்போவதாக மிரட்டுவது கலக்கத்தை உண்டுபண்ணுகிறது.”
முன்பு பிகேஆர் உறுப்பினராகவும் அன்வார் இப்ராகின் உற்ற தோழராகவும் இருந்த எஸ்ஸாம், அம்னோவுக்குக் கட்சிதாவினார். இப்போது அன்வாரின் கடும் பகைவராகி விட்டார்.
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில் குதித்த எஸ்ஸாம், அச்சம்பவம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டுவரும் இணையச் செய்தித்தளங்களை “இஸ்லாத்தின் எதிரிகள்” என்று வருணித்தார்.