டிஏபி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பெர்சே 3.0 பேரணியை நியாயப்படுத்தியுள்ளன

அரசாங்கம் தூய்மையான நியாயமான தேர்தல்களை உறுதி செய்யத் தவறி விட்டதை தேர்தல் பிரச்னைகள் மீது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவுகள் “அப்பட்டமாக காட்டுவதாக” என டிஏபி கூறுகிறது. ஆகவே ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நடத்தப்பட்டதை அந்த முடிவுகள் நியாயப்படுத்தியுள்ளன.

“திரட்டப்பட்ட புள்ளி விவரங்கள்….. கடந்த ஆண்டு மெர்தேக்கா கொண்டாட்டங்களுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட “அரசியல் உருமாற்றத் திட்டங்கள்” மலேசியர்களை நம்ப வைக்கத் தவறி விட்டதை ஐயத்துக்கு இடமின்றி மெய்பித்துள்ளன.”

“அனைத்து மலேசியர்களுக்கும் சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்குக் கோரிக்கை விடுக்கும் பொருட்டு மெர்தேக்கா சதுக்கத்தில் அமைதியாக ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட போதிலும் சாலைகளில் பெர்சே கூடியதற்கான அவசியத்தை அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் முழுமையாக நியாயப்படுத்தியுள்ளன,” என டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா கூறினார்.

ஏப்ரல் மாதம் கோலாலம்பூரில் 1000,000க்கும் மேற்பட்ட மலேசியர்களும் நாடு முழுவதும் இன்னும் பலரும் உலகம் முழுவதும் பல மாநகரங்களிலும் பெர்சே 3.0க்காக சாலைகளில் ஊர்வலமாகச் செல்வதற்கு முன்னதாக மெர்தேக்கா மய்யம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி அவர் கருத்துரைத்தார்.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி, பேட்டி காணப்பட்டவர்களில் 92 விழுக்காட்டினர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என விரும்புவது தெரிய வந்தது. அதே வேளையில் பேட்டி காணப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் நடப்பு தேர்தல் முறையையும் நம்பவில்லை.

 

TAGS: